கடலூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி


கடலூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 19 Jan 2018 4:00 AM IST (Updated: 19 Jan 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தைச்சேர்ந்தவர் காந்தரூபன்(வயது51). இவரது மனைவி மல்லிகா(48). அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கணவர் கண் எதிரே பெண் பலியானார்.

கடலூர்,

கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தைச்சேர்ந்தவர் காந்தரூபன்(வயது51). இவரது மனைவி மல்லிகா(48). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள் களும் உள்ளனர்.

கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் நேற்று காலையில் ஆற்றுத்திருவிழா நடந்தது. இந்த விழாவை காண்பதற்காக காந்த ரூபன் தனது மனைவி மல்லிகாவை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் ஆல்பேட்டைக்கு சென்று கொண்டு இருந்தார்.

அவர்கள் இருவரும் புதுநகர் போலீஸ் நிலையத்தை கடக்கும் போது, பின்னால் வந்த அரசு பஸ் ஸ்கூட்டரில் மோதியது. இதில் கணவன்- மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் மல்லிகாவின் வயிற்றின் மீது பஸ்சின் சக்கரம் ஏறிஇறங்கியது. அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். காந்த ரூபன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் பெண் பலியானதை கண்ட அரசு பஸ் டிரைவர் சாலையோரமாக பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இந்த கோர விபத்து பற்றி காந்தரூபன் கொடுத்த புகாரின் பேரில் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார். ஆற்றுத்திருவிழாவை காணச்சென்ற பெண், விபத்தில் தனது கணவர் கண் எதிரே பலியானது, அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story