நான்குவழிச் சாலையில் தடுப்பு கம்பிகள் அமைப்பு


நான்குவழிச் சாலையில் தடுப்பு கம்பிகள் அமைப்பு
x
தினத்தந்தி 19 Jan 2018 3:36 AM IST (Updated: 19 Jan 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

நான்குவழி சாலையில் தொடர் விபத்துகள் நடந்த இடத்தில் தடுப்பு கம்பிகளை போலீசார் அமைத்தனர்.

மேலூர்,

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலை மதுரை திருச்சி தேசிய நான்குவழிச்சாலை ஆகும். இந்த சாலையில் தொடர்ச்சியாக வேகத்துடன் அதிக அளவு வாகனங்கள் செல்வதால் கிராம மக்கள் சாலையை கடக்கும்போது விபத்துகளில் சிக்கி பலியாகின்றனர். மேலூர் அருகே உள்ள முனிக்கோவில், சூரக்குண்டு விலக்கு ஆகிய இடங்களில் நான்குவழிசாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நான்குவழி சாலையில் விபத்துகளை தடுக்க மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி ஏற்கனவே வெள்ளரிப்பட்டி மற்றும் கருங்காலக்குடி ஆகிய இடங்களில் நான்குவழிச் சாலையில் தடுப்பு கம்பிகள் ஏற்படுத்தி அங்கு நிரந்தரமான போலீசார் பணியில் இருக்கும்படியாக புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நான்குவழி சாலையை எவ்வாறு பாதுகாப்பாக கடந்து செல்வது என்பது குறித்து சூரக்குண்டு கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் தொடர் விபத்துக்கள் நடந்த சூரக்குண்டுவிலக்கு என்னுமிடத்தில் நான்குவழி சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தடுப்பு கம்பிகள் அமைத்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இது போல விபத்துகளை தடுக்க மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்

Next Story