பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் சிவசேனா வலியுறுத்தல்


பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:00 AM IST (Updated: 19 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.

மும்பை,

விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.

பிரவீன் தொகாடியா

விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவை ஒரு வழக்கில் கைது செய்வதற்காக அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு ராஜஸ்தான் போலீசார் சமீபத்தில் விரைந்தனர். இதனிடையே, அவர் அன்றைய தினம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு பூங்காவில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில், போலி என்கவுன்ட்டரில் தன்னை கொல்ல சதி நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். பிரவீன் தொகாடியாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டி, பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:-

விளக்கம்

மத்தியில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அத்வானி உள்பட ஏராளமானவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. பிரவீன் தொகாடியா போன்ற இந்துத்வா ஆதரவு தலைவர்களுக்கு உயிர் பயம் ஏற்படும்போது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏனென்றால், பிரதமர் மோடி மீது கூட கடுமையான குற்றச்சாட்டுகளை பிரவீன் தொகாடியா முன்வைத்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் 4 மூத்த நீதிபதிகள் நீதித்துறையில் மத்திய அரசின் குறுக்கீடு இருப்பதாக குற்றம்சாட்டியபோது, அவர்களை தேசவிரோதிகள் என்றும், காங்கிரசின் ஏஜெண்டுகள் என்றும் வர்ணித்தீர்கள்.

இப்போது, பிரவீன் தொகாடியாவுக்கு என்ன பட்டம் கொடுக்க போகிறீர்கள்?

இந்துத்வா தேசிய கடமை


இந்துத்வாவின் சின்னமாக விளங்கும் வீர சவார்க்கர், பால் தாக்கரே ஆகியோர் ஒருபோதும் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தியதும் இல்லை. கண்ணீர் சிந்தியதும் இல்லை. ஆனால், பிரவீன் தொகாடியா கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். போலீஸ்காரர்கள் என்ற போர்வையில், அவரை நெருங்க கொலையாளிகள் முயற்சிக்கிறார்களா?

எங்களை பொறுத்தமட்டில் இந்துத்வா என்பது விளையாட்டோ அல்லது அரசியல் புரிவதற்கான களமோ அல்ல, தேசிய கடமை.

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

Next Story