ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 450 மாடுகள் விற்பனை


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 450 மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 18 Jan 2018 10:46 PM GMT (Updated: 18 Jan 2018 10:46 PM GMT)

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. 450 மாடுகள் நேற்று விற்பனையானது.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 200 கன்று குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனையானது. பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கன்றுக்குட்டிகளை வாங்கிச்சென்றனர்.

நேற்று வழக்கமான சந்தை நடந்தது. இதற்கு ராஜபாளையம், மதுரை, தேனி, சேலம், கோவை, கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

பசுமாடுகள் 250, எருமை மாடுகள் 200 என மொத்தம் 450 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.34 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

சென்னை, திருவண்ணாமலை, ஆத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.

இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, ‘பனிப் பொழிவு காரணமாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் கடந்த சில மாதங்களாக சந்தைக்கு வரவில்லை. எனினும் இன்று (நேற்று) கொண்டு வரப்பட்ட 450 மாடுகள் விற்பனையானது’ என்றார்.

Next Story