சென்னை புத்தக கண்காட்சி தினத்தந்தி அரங்கில் நடிகர் சிவகுமார், கையெழுத்திட்டு புத்தகங்களை விற்பனை செய்தார்
சென்னையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் நடிகர் சிவகுமார் வரலாற்றை விளக்கும், ‘ஓவியர், நடிகர், பேச்சாளர் சிவகுமார்’ என்ற புத்தகத்தை, நடிகர் சிவகுமார் கையெழுத்திட்டு வாசகர்களுக்கு விற்பனை செய்தார்.
சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 41-வது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சி வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பொதுமக்கள் கண்காட்சிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கண்காட்சியில் 708 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 56 மற்றும் 57-ம் எண் அரங்குகளில் ‘தினத்தந்தி’ பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ‘டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம்’, ஆசிரியர் அமுதன் எழுதிய ‘புதையல் ரகசியம்’, ‘ஆயிரம் ஆண்டு அதிசயம்’, ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு எழுதிய ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய ‘சிறகை விரிக்கும் மங்கள்யான்’ மற்றும் ‘தமிழ் சினிமா வரலாறு’, ‘ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு’ உள்பட ‘தினத்தந்தி’யின் ஏராளமான புத்தக படைப்புகள் இடம் பெற்று உள்ளன. ஒவ்வொரு புத்தகங்களும் சிறப்பு சலுகையாக 10 சதவீத சலுகை விலையில் கிடைக்கின்றன.
நடிகர் சிவகுமார் வழங்கினார்
நடிகர் சிவகுமார் வரலாற்றை, ‘ஓவியர், நடிகர், பேச்சாளர் சிவகுமார்’ என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அவர் தனது திரையுலக அனுபவங்களையும், அவர் வரைந்த ஓவியங்களின் பின்னணிகளையும் சுவையாக சொல்கிறார். இந்த நூலை எழுத்தாளர் ‘வணங்காமுடி’ தொகுத்து வழங்கியுள்ளார். சென்னை புத்தக கண்காட்சியில் நேற்று இந்த புத்தகத்தை வாங்கிய அனைவருக்கும் நடிகர் சிவகுமார், அந்த புத்தகங்களில் கையெழுத்திட்டு, விற்பனை செய்தார்.
புத்தக கண்காட்சியில் தினத்தந்தி அரங்கிற்கு நேற்று மாலை 5 மணிக்கு வந்த நடிகர் சிவகுமாரை, தினத்தந்தியின் தலைமை பொது மேலாளர் (நிர்வாகம்) ஆர்.சந்திரன் வரவேற்றார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அரங்கில் இருந்த சிவகுமார், வாசகர்களுக்கு புத்தகங்களை கையெழுத்திட்டு வழங்கி, வாசிப்பு தன்மையை ஊக்குவித்தார். நடிகர்கள் மனோபாலா, கே.ராஜன் ஆகியோரும் அரங்கிற்கு வந்து சிவக்குமார் புத்தகங்களை வாங்கி சென்றனர். அவர்களுக்கும் சிவக்குமார் கையெழுத்திட்டு வழங்கினார்.
புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை...
பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார், ‘புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை எல்லோரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கை உருவாக்கும் புத்தகங்களை நாடி செல்ல வேண்டும். தங்களுடைய குழந்தைகள் எந்த துறையை விரும்புகிறார்களோ அந்த துறையில் சாதனை படைக்க பெற்றோர்கள் உதவ வேண்டும்’ என்றார்.
இந்த கண்காட்சியில் ஆன்மிகம், விளையாட்டு, கல்வி, தமிழக வரலாறு, பொதுக்கல்வி, போட்டித்தேர்வுகள், தேசிய தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகள், சமையல் கலைகள், உடற்பயிற்சி கலைகள், சித்த மருத்துவ முறைகள், கிராம மருத்துவம், பண்பாட்டு கலைகள், விண்வெளி வானியல் ஆராய்ச்சி குறிப்புகள், நவீன கணக்கியல் வழிமுறைகள், பெண் கல்வி, சித்தாந்த, வேதாந்த குறிப்புகள், வாழ்வியல் நெறிமுறைகள், இதழியல் உள்பட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சலுகை விலையில்...
கண்காட்சியின் அனைத்து அரங்குகளிலும் வைக்கப்பட்டு உள்ள புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களும் இங்குள்ள புத்தகங்கள் அனைத்தும் சலுகை விலையில் கிடைக்கிறது.
Related Tags :
Next Story