அமைச்சர் நமச்சிவாயத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு


அமைச்சர் நமச்சிவாயத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 19 Jan 2018 4:58 AM IST (Updated: 19 Jan 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் நமச்சிவாயத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் நடந்த உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று பணிக்கு திரும்புகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

நேற்று அவர்கள் புதுவை சுதேசி மில் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து கூட்டு போராட்டக்குழு கன்வீனர்கள் ஆனந்தகணபதி, கண்ணன், ராம்குமார், ராமச்சந்திரன், சீனுவாசன், சகாயராஜ், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் சேஷாச்சலம், தொழிற்சங்க தலைவர் வீரமுத்து ஆகியோர் அமைச்சர் நமச்சிவாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு வெகுவிரைவில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மக்கள் நலனை கருத்தில்கொண்டு அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் உறுதி மொழியை ஏற்று ஊழியர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்புகிறார்கள்.

இதுகுறித்து கூட்டு போராட்டக்குழு கன்வீனர்கள் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான கோப்பு சட்டத்துறை செயலாளரின் ஒப்புதல் பெற்று நிதித்துறை செயலாளரிடம் உள்ளது. நிதித்துறை செயலாளரும், முதல்-அமைச்சரும் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் புதுவை திரும்பியதும் அரசாணை வெளியிடுவதற்கான அனைத்து பணிகளையும் நானே மேற்கொள்கிறேன் என்ற உத்தரவாதத்தினை அமைச்சர் நமச்சிவாயம் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டுக்குழு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story