கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி விவசாயிகள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்


கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி விவசாயிகள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2018 4:15 AM IST (Updated: 20 Jan 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி விவசாயிகள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிவராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் பொன்முடி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலையும், 400 ரூபாய் கூலியும் வழங்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் அம்பிகாபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சவுந்தர்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனி, பொருளாளர் முருகன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Next Story