ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் பேச்சால் சர்ச்சை


ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 20 Jan 2018 4:15 AM IST (Updated: 20 Jan 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், முசிறியில் திருச்சி தெற்கு மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன் பேசியதாவது:-

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்காக செய்த சூழ்ச்சிகளை முறியடிக்க டி.டி.வி.தினகரனிடம் முறையிட்டதை அடுத்து ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிடுங்கள் எனக்கூறி வெற்றிவேலிடம் சி.டி.ஒன்றை தினகரன் கொடுத்தார். வீடியோ காட்சியை வெளியிட வெற்றிவேல் தயங்கியபோது, ஒரு வழக்குதானே வரும் பார்த்து கொள்ளலாம் என தைரியம் கூறி, நாங்கள் அனுப்பிவைத்தோம்.

முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து மாஸ்டர் பிளான் செய்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றோம்”. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முசிறியில் நேற்று முன்தினம் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நான் ஒரு சில கருத்துகளை வெளியிட்டேன். அதில் எந்த விதமான உள்நோக்கமும் கிடையாது. எல்லாம் கட்சிகளின் ஆலோசனை கூட்டங்களிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு இதே போல் கட்சிக்காரர்கள் பேசுவது வழக்கமானது தான்.

ஒரு சில கட்சிகள் பணம் கொடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தனர். ஆனால் நாங்கள் பணம் கொடுக்கவில்லை. மக்கள் தினகரன் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்தனர். புதிய கட்சி தொடங்குவது குறித்து தினகரன் என்ன முடிவெடுக்கிறாரோ? அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story