மாணவரின் மரணத்தில் உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் - டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


மாணவரின் மரணத்தில் உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் - டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2018 5:15 AM IST (Updated: 20 Jan 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த மருத்துவ மாணவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருப்பூர்,

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சரத்பிரபுவின் இறப்பு குறித்து உறவினர்களிடம் துக்கம் விசாரிக்க அவருடைய வீட்டிற்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் வந்தார்.

பின்னர் அவர் சரத்பிரபுவின் பெற்றோரை சந்தித்து, மாணவரின் மரணம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சரத்பிரபுவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து நிருபர் களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சரத்பிரபுவின் மரணம் தொடர்பாக அவருடைய தந்தை எழுப்பியுள்ள சந்தேகங்களை அடிப்படையாக கொண்டு மத்திய, மாநில அரசுகள் விசாரணையை தொய்வில்லாமல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநிலங்களில் நமது தமிழக மாணவர்கள் கல்வி பயிலும் போது உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கான பணி சுமை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் மரணத்திற்கு மத்திய அரசு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மாணவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். விசாரணை சரியான பாதையில் நடத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய வேண்டும். திருப்பூரை சேர்ந்த 2 மாணவர்கள் தொடர்ச்சியாக இறந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ரூ.20 டோக்கன் வழங்கியதாகவும், வெற்றி பெற வேண்டியே ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகர் தெரிவித்திருந்தாரே இது உண்மையா? என்பது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, தொண்டர்களை உற்சாகப்படுத்தவே எனது ஆதரவாளர் ராஜசேகர் இந்த மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

Next Story