புனேயில், பூட்டிய வீட்டில் ஐ.டி.நிறுவன ஊழியர், மனைவி, மகனுடன் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை


புனேயில், பூட்டிய வீட்டில் ஐ.டி.நிறுவன ஊழியர், மனைவி, மகனுடன் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Jan 2018 4:30 AM IST (Updated: 20 Jan 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் பூட்டிய வீட்டில் ஐ.டி.நிறுவன ஊழியர், மனைவி மற்றும் 5 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புனே,

புனேயில் பூட்டிய வீட்டில் ஐ.டி.நிறுவன ஊழியர், மனைவி மற்றும் 5 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.டி.நிறுவன ஊழியர்

புனே பனேர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயேஷ் பட்டேல் (வயது 35). ஐ.டி. நிறுவன ஊழியர். இவரது மனைவி பூமிகா(30). இந்த தம்பதிக்கு 5 வயதில் நக்‌ஷ் என்ற மகன் இருந்தான்.

நேற்று காலை வெகுநேரமாகியும் ஜெயேஷ் பட்டேலின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தும் பலனில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள், இதுபற்றி உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தினர்.

தற்கொலை

இதன்பேரில், போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் பதை பதைக்க வைத்தது. வீட்டின் உத்தரத்தில் ஜெயேஷ் பட்டேலும், அவரது மனைவி பூமிகாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

அவர்களது மகன் நக்‌ஷ், தரையில் பிணமாக கிடந்தான். 3 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

சிறுவனை கொலை செய்து பின்னர் தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மன உளைச்சல்

நக்‌ஷ் எப்படி இறந்தான் என்ற விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும். இதனிடையே, நக்‌ஷ் கடந்த சில மாதங்களாக நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர்கள் இந்த விபரீத முடிவை தேடி இருக்கலாம் என்றும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story