பஸ் கட்டண உயர்வு வாபஸ் இல்லை போக்குவரத்து அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு


பஸ் கட்டண உயர்வு வாபஸ் இல்லை போக்குவரத்து அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2018 4:45 AM IST (Updated: 21 Jan 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.

கரூர்,

அதன்படி, சென்னை நீங்கலான பிற மாவட்டங்களில் இயக்கப்படும் நகர, மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயில் இருந்து 19 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது. சென்னையில் மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இதேபோல் வெளியூர் களுக்கு (புறநகர்) செல்லும் பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இந்த கட்டண உயர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது.

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது தெரியாமல் நேற்று பல இடங்களில் பயணிகள் டிரைவர், கண்டக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் எதிர்க்கட்சிகளும் பஸ் கட்டண உயர்வை வன்மையாக கண்டித்து இருக்கின்றன. கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்று வற்புறுத்தி இருக்கின்றன.

ஆனால், பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கரூர் அருகே உள்ள புஞ்சை புகளூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்து துறையில் பஸ் கட்டணம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருக்கின்ற காரணத்தால் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தத்திற்கு பிறகு ஒரு நாளைக்கு ரூ.12 கோடியாக நஷ்டம் உயர்ந்து விட்டதாலும், அதிக நிதிச்சுமையினாலும், 2011-ம் ஆண்டுக்கு பின் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கடுமையான டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, உதிரி பாகங்கள் விலையேற்றம் போன்ற காரணங்களால் இந்த நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்வதற்காகத்தான் முதல்-அமைச்சர் கடந்த 1½ ஆண்டுகளில் ரூ.4,657 கோடி நிதி கொடுத்து உள்ளார். ஓய்வுபெற்ற 60 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.2,500 கோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதி வரை முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிதி பற்றாக்குறையால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். இதை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். நாட்டிலேயே தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவுதான். அண்டை மாநிலங்களில் 2014-2015-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட கட்டணமாக உள்ளது. அடுத்த பஸ் கட்டண உயர்வுக்கு அண்டை மாநிலங்கள் தயாராகி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பொதுமக்களின் நலன் காக்கிற அரசாக குறைவான கட்டணத்தில் நிறைவான சேவை வழங்கி இருக்கிறோம்.

தமிழகத்தில் தான் அதிகமாக 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கிராமம் மற்றும் மலைப்பகுதிகளில் 12 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் அதிகமான பயணிகள் வருவதில்லை. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சேவை மனப்பான்மையோடு பஸ்கள் இயக்கப்படுவதால் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பஸ் கட்டண உயர்வுக்கு பின்னும் ஆண்டுக்கு ரூ.900 கோடி பற்றாக்குறை ஏற்படும். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு ரூபாயில் டீசல் செலவினம் 37½ சதவீதமும், உதிரிபாகங்கள் செலவினம் 4¼ சதவீதமும், சம்பளமாக 79.8 சதவீதமும், நிர்வாக செலவினம் 21.5 சதவீதமும், தேய்மானம் 2.5 சதவீதமும் ஆகிறது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் வரவு என்றால், ரூ.1.45 செலவு ஏற்படுகிறது. இதனால் ரூ.12 கோடி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காகத்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பஸ் கட்டண உயர்வு அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு பொருந்தும். தனியார் பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் போக்குவரத்து கழகங்களில் டீசலுக்கு வாட் வரியில் விலக்கு அளிக்கப்படுவது போல் தமிழகத்திலும் விலக்கு அளிக்கப்படுமா? என்பது அரசின் கொள்கை முடிவு. போக்குவரத்து துறையில் நிதிச்சுமை இருந்தாலும் அதனை அரசு தான் சரி செய்து கொண்டிருக்கிறது. 4 ஆயிரம் புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. படிப்படியாக பஸ்கள் நவீனமயமாக்கப்படும்.

படுக்கை வசதி, கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் 200 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டமாக 5 இரண்டு அடுக்கு பஸ்களை இயக்க முடிவு செய்து உள்ளோம்.

போக்குவரத்து துறையை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பு இல்லை. போக்குவரத்து கழக கோட்டங்களை இணைக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற மாட்டோம். கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். 

Next Story