எட்டயபுரம் அருகே மில் தொழிலாளி கொலையில் கப்பல் மாலுமி கைது


எட்டயபுரம் அருகே மில் தொழிலாளி கொலையில் கப்பல் மாலுமி கைது
x
தினத்தந்தி 21 Jan 2018 2:00 AM IST (Updated: 21 Jan 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மில் தொழிலாளியை கொலை செய்த கப்பல் மாலுமியை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம்,

எட்டயபுரம் அருகே மில் தொழிலாளியை கொலை செய்த கப்பல் மாலுமியை போலீசார் கைது செய்தனர். தங்கையின் திருமணத்துக்கு இடையூறு செய்ததால் கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

கப்பல் மாலுமி கைது


தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவருடைய மகன் அருண்பாண்டி(வயது 24). இவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் நாற்கர சாலை பஸ்நிறுத்தம் அருகில் கழுத்தில் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், தேனி மாவட்டம் பொன்னுகவுண்டம்பட்டியைச் சேர்ந்த மன்மதன் மகன் நீல விக்னேஷ்(30), அருண்பாண்டியை கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான நீல விக்னேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

தங்கையின் திருமணத்துக்கு இடையூறு

நான் கப்பலில் மாலுமியாக வேலை செய்து வருகிறேன். அருண்பாண்டி, என்னுடைய தங்கை உறவுமுறையான பெரியப்பா மகளை காதலித்து வந்தார். இதற்கிடையே என்னுடைய தங்கைக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கு மே மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அருண்பாண்டி என்னுடைய தங்கையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக என்னுடைய சகோதரர் ராம்குமாரிடம் அவதூறாக பேசி பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் அந்த படங்களை பெறுவதற்காக நான், அருண்பாண்டிக்கு 3 முறை தலா ரூ.25 ஆயிரம் வழங்கினேன். ஆனாலும் அவர் அந்த படங்களை திருப்பி தராமல் தங்கையின் திருமணத்தில் இடையூறு செய்வதாக மிரட்டி வந்தார்.

காரை ஏற்றி கொலை

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அருண்பாண்டி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், அந்த படங்களை பெறுவதற்கு வெம்பூர் நாற்கர சாலையில் உள்ள கேன்டீனுக்கு இரவில் தனியாக வருமாறு கூறினார். அதன்படி நானும் காரில் அங்கு தனியாக சென்றேன். அப்போது அருண்பாண்டி கேன்டீனில் இல்லை. உடனே அவருக்கு நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது அருண்பாண்டி, அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்து என்னிடம் தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்றார். நான் பதிலுக்கு கல்லால் தாக்கியதில் அருண்பாண்டியிடம் இருந்த கத்தி தவறி விழுந்தது. அதனை எடுத்து நான் அருண்பாண்டியின் கழுத்தில் 2 முறை கிழித்தேன். ஆனாலும் அவர் என்னை செல்ல விடாமல் தொடர்ந்து தாக்கினார். இதனால் அருண்பாண்டியை கீழே தள்ளி விட்டு எனது காரை ஓட்டிச்சென்று அவர் மீது ஏற்றி கொலை செய்தேன். பின்னர் அருண்பாண்டியின் மடிக்கணினியை எடுத்து அதில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்தேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.

கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் அருண்பாண்டியின் மடிக்கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story