எனது மகன் மரணத்துக்கு உண்மையான காரணம் தெரிய வேண்டும் மருத்துவ மாணவர் தந்தை பேட்டி


எனது மகன் மரணத்துக்கு உண்மையான காரணம் தெரிய வேண்டும் மருத்துவ மாணவர் தந்தை பேட்டி
x
தினத்தந்தி 21 Jan 2018 4:30 AM IST (Updated: 21 Jan 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

எனது மகன் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரிய வேண்டும் என்று மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் தந்தை செல்வமணி திருப்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

திருப்பூர்,

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் தந்தை செல்வமணி நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

எனது மகன் உடலில் பொட்டாசியம் குளோரைடை ஊசி மூலமாக செலுத்தியதில் இறந்து விட்டதாக மருத்துவ அறிக்கை சொல்கிறது. இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு கவலையோ, கஷ்டமோ அவனுக்கு கிடையாது. சம்பவத்தன்று இரவு எனது மகனுடன் சேர்ந்து படிக்கக்கூடிய மருத்துவ மாணவர்கள் கார்த்திக், அரவிந்த் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் பேசிவிட்டு இரவு 11 மணிக்கு மேல் படுத்து தூங்கியுள்ளனர்.

மறுநாள் காலையில் எனது மகன் சரத்பிரபு படுக்கை அறையில் மயங்கி கிடந்துள்ளார். அரவிந்த் என்பவர் பார்த்து உடன் இருந்த மாணவர் கார்த்திக்குடன் சேர்ந்து எனது மகனை தூக்கி உள்ளார். அப்போது சரத்பிரபு மூச்சை இழுத்து விட்டுள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக இருவரும் சேர்ந்து சரத்பிரபுவை காரில் வைத்து அவர் படித்த மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு சரத்பிரபுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

முதலில் எனக்கு மாணவர் அரவிந்த், போனில் பேசியபோது, சரத்பிரபுவுக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறினார். சிறிது நேரம் கழித்து அரவிந்த் என்னை தொடர்பு கொண்டு, சரத்பிரபு இறந்து விட்டதாக கூறினார். இதை கேட்டவுடன் எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. ஆனால் சரத்பிரபு படித்த யூ.சி.எம்.எஸ். மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.

3 காரணங்களால் சரத்பிரபு இறந்து இருக்க வாய்ப்பு உள்ளது. சரத்பிரபு அவராகவே ஊசியை தனது உடலில் செலுத்திக்கொண்டாரா?, உடன் இருந்த மாணவர்கள் ஊசி போட்டார்களா?, சரத்பிரபுவின் அறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து அவருடைய கழுத்து மற்றும் கையை பிடித்து வைத்துக்கொண்டு சரத்பிரபுவின் உடலில் ஊசியை செலுத்தி கொலை செய்து விட்டு தப்பிவிட்டார்களா? என்பவை தான்.

நாங்கள் புலன்விசாரணை செய்து இதை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் டெல்லி போலீசார் என்னிடம் தெரிவித்தார்கள். உண்மைநிலை என்ன என்று டெல்லி போலீஸ், சி.பி.ஐ., சிறப்பு பிரிவு போலீஸ் ஆகிய 3 பேரும் தெரிவிக்க வேண்டும்.

எனது மகனின் நெற்றியில் காயம் உள்ளது. இரும்பு கம்பி அல்லது தடியால் அடித்தால் மட்டுமே நெற்றியில் அந்த அளவுக்கு வெட்டுக்காயம் ஏற்படும் என்று எனக்கு தெரிந்த டாக்டர்கள் கூறியுள்ளனர். கழுத்து பகுதியில் சிவப்பு நிறமாக காணப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பு விவரம் தெரியவரும். தடியால் சரத்பிரபுவை தாக்கி, பின்னர் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்து கையை மடக்கி பிடித்து ஊசியை போட்டிருக்கலாம் என்று மூத்த டாக்டர் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். எனது மகன் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story