பிற மதத்தினருடன் முஸ்லிம்கள் அன்பு பாராட்டவே செய்கின்றனர்


பிற மதத்தினருடன் முஸ்லிம்கள் அன்பு பாராட்டவே செய்கின்றனர்
x
தினத்தந்தி 21 Jan 2018 4:00 AM IST (Updated: 21 Jan 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

பிற மதத்தினருடன் எப்போதும் முஸ்லிம்கள் அன்பு பாராட்டவே செய்கின்றனர் என்று முஸ்லிம் தர்மபரிபாலன சங்க பொதுக்கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் கூறினார்.

பழனி,

பழனி ஆர்.எப். ரோட்டில் மின்வாரியம் அருகே பழனி நகர் முஸ்லிம் தர்மபரிபாலன சங்கம், வட்டார ஜமாத்தார்கள் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதற்கு முஸ்லிம் தர்மபரிபாலன சங்க செயலாளர் நாசர்தீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கைசர் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகக் குழு உறுப்பினர் சையதுசாந்துமுகமது தொகுப்புரையாற்றினார்.

தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

முத்தலாக் முறை என்பது முஸ்லிம் பெண்களை அடிமைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதல்ல. அவர்களை நெறிப்படுத்தி பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகும்.

அதேபோல் பிற வழிபாட்டு தலங்களுக்குரிய இடங்களை ஆக்கிரமித்து எந்த இடத்திலும் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டதில்லை. பிற மதத்தினருடன் எப்போதும் முஸ்லிம்கள் அன்பு பாராட்டவே செய்கின்றனர். முஸ்லிம் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு வேறு எதிலும் கிடையாது. மேலும் பிற மதங்கள் எந்த நிலையிலும் முஸ்லிம் மதத்தில் ஊடுருவ முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதையடுத்து மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு, கட்சிகளை சேர்ந்தவர்கள் சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் தீர்மானத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பழனியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் இனி எந்த இடத்திலும் அது போன்ற கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story