திருவெறும்பூரில் பாய்லர் ஆலை ரவுண்டானாவின் அளவு குறைக்கப்படும் அதிகாரிகள் தகவல்


திருவெறும்பூரில் பாய்லர் ஆலை ரவுண்டானாவின் அளவு குறைக்கப்படும் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2018 4:00 AM IST (Updated: 21 Jan 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூரில் பாய்லர் ஆலை ரவுண்டானாவின் அளவை குறைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

திருவெறும்பூர்,

திருச்சியில் இருந்து தஞ்சை மார்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் நேரடி பாதையான திருவெறும்பூர் வழியாக பாய்லர் ஆலை, தேசிய தொழில்நுட்ப கழகம் உள்ளிட்டவற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அப்பகுதியில் 2008-ஆம் ஆண்டு 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது அணுகுசாலை அமைக்காமலேயே, 4 வழி சாலை பணி முடிக்கப்பட்டது. திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி இங்குள்ள நல சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் இதுவரை அணுகுசாலை அமைக்கப்படவில்லை.

மேலும், பாய்லர் ஆலை ராட்சத ரவுண்டானாவை அகற்றிட கோரியும், நெடுஞ்சாலையில் விளக்கு கம்பங்கள் மற்றும் சிக்னல் கம்பங்களை அமைத்து தருமாறும் போராடினர். இந்நிலையில் இந்த கோரிக்கைகள் குறித்து திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழி, மத்திய அமைச்சகத்தில் மனு அளித்ததோடு, சட்டமன்றத்திலும் பேசினார். மேலும் தஞ்சையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை திட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகளிடமும் 2 நாட்களுக்கு முன்பு மனு அளித்தார்.

இந்நிலையில் நேற்று காலை திட்ட அமலாக்க பிரிவு திட்ட இயக்குனர் சுதாகர் ரெட்டி, அந்த பிரிவின் தொழில்நுட்ப மேலாளர் அதிபதி ஆகியோர் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.வுடன் பாய்லர் ஆலை ரவுண்டானாவை ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், அணுகுசாலை பிரச்சினை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்த எந்த முடிவையும் தற்போது எடுக்க முடியாத சூழல் உள்ளது. அதே சமயம் பாய்லர் அலை ரவுண்டானாவின் அளவை குறைக்கவும் மற்றும் பாய்லர் ஆலை ரவுண்டானா முதல் துவாக்குடி வரையில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் விளக்கு கம்பங்கள் மற்றும் சிக்னல் கம்பங்கள் அமைத்திடவும் மிக விரைவில் பணிகள் தொடங்கப்படும், என்றனர். 

Next Story