போதிய மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது விவசாயிகள் கவலை


போதிய மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 21 Jan 2018 4:00 AM IST (Updated: 21 Jan 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

போதிய மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மண்டியா,

போதிய மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணை

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் இந்த அணை, கர்நாடகம், தமிழ்நாடு மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், ஸ்ரீரங்கப்பட்டணா, பெங்களூரு புறநகர், தமிழ்நாடு தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் வழியாக பூம்புகாரை சென்றடைகிறது. இருமாநிலங்களிலும் குடிநீர் மற்றும் விவசாய தேவையையும் காவிரி ஆறு பூர்த்தி செய்து வருகிறது.

இதனால் கர்நாடகம், தமிழ்நாடு மக்கள் கே.ஆர்.எஸ். அணையை தான் முழுமையாக நம்பி உள்ளனர். இருமாநிலங்கள் இடையே காவிரி தண்ணீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. நன்றாக மழை பெய்யும் காலங்களில் எந்த பிரச்சினையும் எழுவதில்லை. ஆனால், வறட்சி காலங்களில் மட்டும் தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் இருமாநிலங்களிலும் பிரச்சினை ஏற்படுகிறது.

நீர்மட்டம் குறைந்து வருகிறது

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 99.94 அடி நீர் இருப்பு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் தலைக்காவிரி பகுதியில் போதிய அளவில் மழை பெய்யாததால், அணைக்கு வினாடிக்கு 141 கனஅடி வீதம் மட்டும் தான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 4,428 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

தண்ணீர் வரத்தை விட, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், போதிய மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் அணைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. ஆனால் போதிய மழை இல்லாததால், அது படிப்படியாக குறைந்து தற்போது வினாடிக்கு 141 கனஅடி மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

விவசாயிகள் கவலை

கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், அணை தற்போது ஒரு குட்டை போல காட்சி அளிக்கிறது. மேலும் அணையின் பல்வேறு பகுதி வறண்டுபோய் உள்ளன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், அணை முழுவதுமாக வறண்டு விடும் அபாயம் நிலவுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் விவசாய பாசனத்துக்கு போக, மீதி தான் தமிழகத்துக்கு செல்வதால், தமிழ்நாடு மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையை நம்பி விவசாயம் செய்துவரும் விவசாயிகள் தற்போது மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் அணையில் தற்போது உள்ள நீர், கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மைசூரு, ராமநகர், பெங்களூரு, மண்டியா, துமகூரு ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story