கனகன் ஏரியில் உணவக வசதி கவர்னர் கிரண்பெடி ஆலோசனை


கனகன் ஏரியில் உணவக வசதி கவர்னர் கிரண்பெடி ஆலோசனை
x
தினத்தந்தி 21 Jan 2018 5:07 AM IST (Updated: 21 Jan 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

கனகன் ஏரியில் உணவகம் அமைப்பது குறித்து கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 சனிக்கிழமையும் கனகன் ஏரிக்கு சென்று ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அங்கு தற்போது பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பெடி மீண்டும் கனகன் ஏரி பகுதிக்கு சென்றார்.

இதற்காக அவர் கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் சென்றார். அவருடன் கவர்னர் மாளிகை அதிகாரிகள் உடன் சென்றனர். கனகன் ஏரிக்கு சென்ற அவர் அங்கு இருந்த அதிகாரிகளிடம் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஏரியில் இருந்து ஆகாய தாமரை செடிகள் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்க தேவையான பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் அந்த ஏரியை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத்துறை சார்பில் அந்த பகுதியில் சிறிய உணவகம் வசதி ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

Next Story