பயணம் பாதுகாப்பாகுமா?


பயணம் பாதுகாப்பாகுமா?
x
தினத்தந்தி 21 Jan 2018 11:00 AM IST (Updated: 21 Jan 2018 11:00 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் 4-வது மிகப்பெரிய ரெயில்வேயாக இந்திய ரெயில்வே திகழ்கிறது. வசதியான பயணத்துக்கு பெரும்பாலும் ரெயில் பயணத்தையே மக்கள் தேர்வு செய்கிறார்கள்.

தண்டவாளங்களை ஆய்வு செய்தல், சிக்னல், என்ஜினீயரிங் மற்றும் தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட பாதுகாப்பினை உறுதி செய்யும் துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக முழுவதுமாக நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத நிலவரப்படி, 2014-ம் ஆண்டு 17.75 சதவீதம், 2015-ம் ஆண்டு 16.85 சதவீதம், 2016-ம் ஆண்டு 16.44 சதவீதம், 2017-ம் ஆண்டு 16.86 சதவீதம் ரெயில்வே பாதுகாப்பு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்திருக்கின்றன. அதாவது ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட அளவு பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன.

காலி பணியிடங்களால் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, ரெயில் விபத்துகளும் தொடர்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் நடந்த 587 ரெயில் விபத்துகளில், சுமார் 300-க்கும் மேற்பட்ட விபத்துகள் ரெயில் தடம்புரண்டதால் நிகழ்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் ஆண்டில் 107 ரெயில் விபத்துகளும், 2016-17-ம் ஆண்டில் 104 ரெயில் விபத்துகளும், 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் மட்டும் 49 ரெயில் விபத்துகளும் நடந்துள்ளன.

இதனால் ரெயில் பயணம் பாதுகாப்பான பயணம் தானா? என்ற அச்ச உணர்வு பயணிகளிடம் நிலவுகிறது. ரெயில்வே துறையின் பாதுகாப்பு பிரிவுகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்துவரும் சூழ்நிலையில், புதிதாக பணியாளர்களை நியமித்து, ரெயில் தண்டவாளத்தை சீரமைப்பு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதோடு, பராமரிப்புக்காக கூடுதல் நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பயணிகள் பாதுகாப்பு உணர்வோடு பயணம் செய்ய ஏதுவாக அமையும். ரெயில் நிலையங்களில் ஒலிக்கும், ‘உங்கள் பயணம் இனிதாகுக’ என்ற குரல் வாசகமும் சாத்தியமாகும்.

-வக்கீல் நாராயணகுமார்

Next Story