கண்ணீர் கடலில் மீனவ குடும்பங்கள்
இந்திய அளவில் மக்களால் அறியப்பட்ட தமிழக ஊர்களில் கன்னியாகுமரி முக்கியமானது.
வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை என்றுதான் இந்தியாவின் எல்லையை குறிப்பிடுகிறோம். ஆனால், காஷ்மீர் ஓர் மாநிலம். குமரியோ ஓர் ஊர்.
தென்திசையின் தேச எல்லையாக விளங்கும் வகையில் சிறப்பான இட அமைப்பில் கன்னியாகுமரி அமைந்திருப்பதால் நாடு முழுவதும் அறியக்கூடியதாக குமரி விளங்குகிறது.
நாகர்கோவில் மாவட்ட தலைநகராக இருந்தாலும், கன்னியாகுமரியை அடையாளம் காட்டி, குமரி மாவட்டம் என்று அழைக்கிறார்கள். முக்கடலும் குமரி முனையில் சங்கமிக்கின்றன. எனவே கடலோர பகுதிகள் மாவட்டத்தின் மூன்று திசைகளிலும் உண்டு.
மூன்று புறமும் கடலாலும், ஒரு புறம் நிலத்தாலும் சூழப்பட்டதை தீபகற்பம் என்று அழைப்பதை போல, குமரி மாவட்டத்தையும் அவ்வாறு அழைக்க முடியும்.
எனவே கடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது குமரி மாவட்டம். மீனவ மக்கள் கணிசமான அளவில் இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள்.
‘இயற்கை’யாக குமரி மாவட்டத்துக்கு நில அமைப்பு ரீதியில் பல்வேறு சிறப்புகள் உண்டு. அதே நேரம் ‘இயற்கை சீற்றம்’ என்று ஏற்பட்டால் தானாகவே பல பாதிப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. குறிப்பாக கடல் சார்ந்த இயற்கை சீற்றம் என்றால், குமரி மாவட்டம் நிச்சயம் பாதிக்கப்படக் கூடியதாகி விடுகிறது. சமீப காலத்தில் குமரியை இரண்டு இயற்கை சீற்றங்கள் புரட்டி போட்டன.
அதில் ஒன்று, 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி எனப்படும் ‘ஆழிப்பேரலை’. மற்றொன்று கடந்த நவம்பர் 30-ந் தேதி அதிகாலையில் வீசிய ‘ஆழிக்காற்று’.
காற்றழுத்த தாழ்வு நிலையாக கடல் பகுதியில் உருவாகி, புயலாக மாறிய அந்த ஆழிக்காற்று குமரியை நெருங்கி வந்து கடல் வழியாகவே சென்றதால் ஏற்பட்ட பேரழிவு கொஞ்சநஞ்சம் அல்ல!
‘ஒகி’ என்று அந்த புயலுக்கு பெயரிட்டார்கள். புயல் ஓய்ந்தாலும், ‘ஒகி’ என்ற வார்த்தைக்கு குமரி மாவட்டத்தில் சிறுவர்களை கேட்டாலும், அது ஒரு புயல் என்று விளக்கம் சொல்லும் அளவுக்கு மாறாத ஒரு தழும்பாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
அந்த புயலில் சிக்கி கடலிலேயே மாண்டு சடலமாக மீனவர்கள் பலர் கரை ஒதுங்கினார்கள். மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் கதி என்ன? என்பதற்கு அரசால் இன்னமும் விடை கூற முடியவில்லை. பார்த்து பார்த்து வளர்த்த பயிர்கள், மரங்கள் சில மணி நேர புயலில் சாய்ந்து, பட்டமரங்களாகி விட்டதால் ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். பலர் வீடுகளை இழந்து நிற்கிறார்கள்.
இவ்வாறு பல துயரங்களை கொடுத்த புயல் ஓய்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாகிறது. ஆனால், குமரி மாவட்டம் முழுமையாக மீண்டு வந்திருக்கிறதா? மீனவ கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி இருக்கிறதா? என்பதற்கான விடையை இனி காணலாம்.
‘ஒகி’ புயலால் கேரளாவும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாலும், குமரி மாவட்டம்தான் அதிக சேதத்தை சந்தித்து இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை மீனவ மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஆனால், இந்த ஆண்டில் அந்த கொண்டாட்டங்கள் களை இழந்து போனதற்கு ‘ஒகி’தான் ஒற்றைக் காரணம்.
கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், சகோதரனை இழந்தவர்கள் என மீனவ கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பெரும் தவிப்பில் உள்ளன.
அறியாப் பருவத்தில் உள்ள குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய தந்தை எப்போது வருவார்? என்று தேடி தவிப்பது இன்னும் பரிதாபம். குமரி மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று பல நாட்கள் தங்கி இருந்து மீன்பிடிப்பார்கள். பின்னர் கரை திரும்பி குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் மீன்பிடிக்க புறப்படுவார்கள். எனவே வழக்கமாக மீன்பிடிக்கச் செல்வது போல்தான் தந்தை மீன்பிடிக்கச் சென்று இருக்கிறார், சீக்கிரம் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் நிறைய குழந்தைகள் எதிர்பார்த்து தவிக்கின்றன. ஆனால், புயலின் கோரப் பிடியில் அந்த மீனவர்கள் சிக்கிவிட்டார்கள், அவர்கள் கதி என்ன? என்பதை அறிய முடியவில்லை என்று அந்த குழந்தைகளிடம் விளக்கி கூறி யார் புரிய வைப்பது?
தந்தை எப்போது வருவார் என்று தாயிடம் கேட்டு அடம் பிடித்து அழும் குழந்தையை தேற்றுவதற்கு, அந்த தாயும் அழுகையையே பதிலாக தெரிவிக்க வேண்டிய சோகம்தான் அங்கு நிலவுகிறது.
‘ஒகி’ புயல் நிலப்பரப்பில் ஆடிய கோரத்தாண்டவத்தை விட, கடலுக்குள் ஆடிய ருத்ரதாண்டவம் மிகவும் கொடூரமாக இருந்தது என்று அதில் சிக்கி, மீண்டு கரை சேர்ந்த மீனவர்கள் கூறுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் தூத்தூர், நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, பூத்துறை, இரையுமன்துறை, தேங்காப்பட்டினம், குளச்சல், மணக்குடி என்று பல கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒகி புயலில் சிக்கி மாயமாகி உள்ளார்கள். அதில், சின்னத்துறை மீனவ கிராமத்தில் மாயமான மீனவர்களின் புகைப்படங்கள் பேனராக வைக்கப்பட்டு, அதில் “ஒகி புயலில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதேபோல் வள்ளவிளை கிராமத்திலும் மாயமான மீனவர்களின் புகைப்படங்கள் பேனராக வைக்கப்பட்டுள்ளன. அதில் கரை திரும்பவேண்டிய வள்ளவிளை மீனவர்கள் 33 பேர், நம் படகில் சென்று கரைதிரும்ப வேண்டிய வெளியூர் மீனவர்கள் 37 பேர் என்று 70 பேர் பெயர் விவரம் இடம்பெற்றுள்ளது. அதில், 65 பேரின் புகைப்படங்களும் உள்ளன.
அந்த பேனரில் இன்னொரு வாசகமும் இடம்பெற்றுள்ளது.
“மீட்க தவறிவிட்டார்களா?
இல்லை-
மீட்பதையே தவிர்த்து விட்டார்களா?
நிவாரணத்துக்காக அல்ல,
நீதிக்கான குரல் எழுப்பி காத்திருக்கிறோம்,
நீங்கள்-
மீண்டு வருவீர்கள் என்று”
என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மாயமான மீனவர்களுடன் மீன்பிடி தொழிலுக்காகவும், சமையல் வேலைக்காகவும் உடன் சென்றிருந்த பல வெளிமாநில தொழிலாளர்களும் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத்தேடி வடமாநிலங்களில் இருந்து அவர்களது சொந்தபந்தங்கள் பலர் தூத்தூர் மற்றும் வள்ளவிளை கிராமங்களுக்கு வந்து சென்றுள்ளனர்.
இப்படி சோகம் இழையோடிக் கொண்டிருக்கும் குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் இன்னமும் சரியான நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்பது பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.
நிர்க்கதியான குடும்பம்
சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த மெல்க்கியாஸ் (60) என்பவரின் குடும்பமும் சோகத்தில் தவிக்கிறது. அவருடைய மகன் ஜூடி, மகள் ஜூல்சியின் கணவர் ராபின் ஆகிய 2 பேரும் ஒகி புயலில் சிக்கி மாயமாகிவிட்டார்கள்.
மெல்க்கியாஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரால் கடல் தொழிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே மகன் ஜூடியும், மருமகன் ராபினும் தங்களது மீன்பிடி தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் மெல்கியாசுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். எனவே இந்த குடும்பமும் உழைக்கும் ஆண் நபர் இன்றி தவித்து வருகிறது.
இதுதொடர்பாக மெல்க்கியாஸ் வேதனையோடு கூறியது:-
கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி கூலிக்கு மீன்பிடிக்க எனது மகன் ஜூடி, மருமகன் ராபின் உள்பட 12 பேர் சென்ற படகு ஒகி புயலில் சிக்கி கவிழ்ந்துபோய் விட்டது. அந்த படகில் சென்ற 2 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன.
எனது மகன், மருமகன் திரும்பி வராததால் தவிக்கும் எனது மனைவி, மகள், மருமகள், பேரக்குழந்தைகளை பார்க்கும்போது நான் அடையும் துக்கத்துக்கு அளவே இல்லை. எனது மகள் வயிற்று பேரன்களில் மூத்த பேரனுக்கு புயல் பாதிப்பு பற்றி தெரியும். 5 வயதாகும் இளைய பேரனுக்கு அதுபற்றி தெரியாது. அவன் தனது அப்பா எப்போது வருவார்? என்று கேட்டு அழுதுகொண்டே இருக்கிறான். அவனிடம் உனது அப்பா வெளிநாடு சென்றிருக்கிறார். விரைவில் வந்து விடுவார். வரும்போது உனக்கு நிறைய விளையாட்டு சாதனங்கள் வாங்கி வருவார் என்று கூறி ஆறுதல்படுத்தி வருகிறோம். அவனை நாங்கள் ஆறுதல்படுத்தினாலும், அதை கூறும்போது மனதுக்குள் அடையும் வேதனைக்கு அளவே கிடையாது.
கடலில் இருந்து மீட்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் அடையாளம் தெரியாத உடல்களில் எனது மகன் மற்றும் மருமகன் உடல்கள் இருக்கலாமோ? என்ற எண்ணத்தில் திருவனந்தபுரத்திற்கு நானும், எனது மூத்த பேரனும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்று வந்தோம். டி.என்.ஏ. பரிசோதனையில் ராபின் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கு பரிசோதனை மேற்கொள்ள மாதாமாதம் ரூ.5 ஆயிரம் செலவாகும். இந்த செலவை எனது மகனும், மருமகனும்தான் கவனித்துக் கொண்டனர். என்னால் தொழிலுக்கு செல்ல முடியாததால் எனது குடும்பத்தையும் அவர்கள்தான் கவனித்து வந்தனர். தற்போது அவர்கள் 2 பேரும் இல்லாததால் நான் இந்த மாதம் பரிசோதனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பமும் நிர்க்கதியாக்கப்பட்டு இருக்கிறது. அரசு இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் தரவில்லை. எனவே அரசு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும். எனது மகள் மற்றும் மருமகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.
இவ்வாறு மெல்க்கியாஸ் கூறிக்கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி மேரி மற்றும் மகள் ஜூல்சி ஆகியோர் சோகமே உருவாக ஜூடி, ராபின் ஆகியோரின் உருவப்படங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“எதிரிகளுக்கு கூட இந்த நிலை ஏற்படக்கூடாது”
ஒகி புயலில் குடும்பத்தினரை இழந்து நிர்க்கதியாகிஇருக்கும் குடும்பங்களில் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மில்டன் (வயது 36) என்பவரது குடும்பமும் ஒன்று. மில்டனுக்கு ஷர்மிளா (35) என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர்.
கடலுக்கு சென்ற மில்டன் கரை திரும்பி வராததால், 4 குழந்தைகளுடன் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் ஷர்மிளா. மாற்றுத்திறனாளியான அவரை மில்டன் மணந்து கொண்டு, நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்து உள்ளார். அதாவது மில்டனும், ஷர்மிளாவின் அண்ணன் அந்தோணி ராஜூவும் நெருங்கிய நண்பர்கள்.
நண்பனின் தங்கை மாற்றுத்திறனாளியாக இருப்பதால், தங்கையின் திருமணத்தை நடத்த நண்பர் சிரமப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மில்டன் தாமாக முன்வந்து, ஷர்மிளாவை கரம் பிடித்துள்ளார்.
ஒகி புயலோ- மில்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்தோணிராஜையும் விட்டு வைக்கவில்லை. ஒரே படகில் சென்ற 11 பேரை கரை திரும்ப முடியாமல் செய்துவிட்டது.
கணவர்- 4 குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கை இப்போது திசை தெரியாமல் நடுக்கடலில் தவிக்கும் படகு போலாகிவிட்டது, என்கிறார் ஷர்மிளா சோகத்துடன்.
அவர் தனது சோகத்தை பகிர்ந்து கொள்கிறார்...
என் கணவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரின் விசைப்படகின் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த நவம்பர் 22-ந் தேதி அந்த படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். அவருடன், என் தந்தை கிறிஸ்டோபர் (67), அண்ணன் அந்தோணிராஜ் (37), என் கணவரின் அத்தான் ஜேம்ஸ், அவரது சித்தி மகன் ரோமான்ஸ், மாமா மகன் ரிஜோ, நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் அந்த படகில் சென்றனர். 15 நாட்களில் கரை திரும்ப வேண்டிய இவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.
எனக்கு எல்லாமே எனது கணவர்தான். நான் ஊனமுற்ற பெண். என்னை திருமணம் செய்து கொடுக்க என் அண்ணன் கஷ்டப்படக்கூடாதே என்ற நல்ல எண்ணத்தில், நான் ஊனமாக இருந்தாலும் என்னை விரும்பி திருமணம் செய்துகொண்டார்.
அதனால் எனது அண்ணனும், தந்தையும் என் கணவருக்கு ஆதரவாக அவருடன் தொழிலுக்கு சென்றார்கள். எனக்கு சார்லஸ் (10), மெல்பின் (8), மெபின் (6) என்ற 3 மகன்களும், எலிசா (3) என்ற மகளும் உள்ளனர். 4 பேருமே பள்ளிக்கூடம் செல்கிறார்கள்.
எனது கணவரும், அவருடன் சென்ற 10 பேரும் சென்ற விசைப்படகு ஒகி புயலில் சிக்கி கடலில் மூழ்கி உள்ளது. இதை கப்பல்படை வீரர்களுடன் தேடுவதற்காக சென்ற எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அதை உடனே தெரிவித்தால் நாங்கள் மிகுந்த வேதனை அடைவோம் என்று அவர்கள் எங்களிடம் கூறவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இதை எங்களிடம் தெரிவித்தார்கள். எனவே அவர்களது உடல்களாவது கிடைக்கட்டும், அதைப்பார்த்தாவது கொஞ்சம் ஆறுதல் அடைகிறோம் என்று கூறி தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்.
திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் இருக்கும் உடல்களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களும் இருக்குமோ? என்ற எண்ணத்தில் எனது கணவருக்காக மூத்த மகன் சார்லசும், எனது தந்தைக்காக எனது மூத்த அக்காளும், எனது அண்ணனுக்காக அவருடைய மகனும் டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனைக்காக சென்று வந்தனர். இதுவரை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களோ, எனது கணவருடன் சென்றவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை.
எனக்கு அனைத்து விதத்திலும் ஆறுதலாக இருந்தது எனது கணவர்தான். அவர் இல்லாதபட்சத்தில் என்னை காப்பாற்ற வேண்டும் என்றால் எனது தந்தையும், அண்ணனும்தான் காப்பாற்ற வேண்டும். அவர்களும் புயலில் மாயமாகிவிட்டார்கள்.
நான் பி.காம். படித்திருக்கிறேன். ஆனால், மாற்றுத்திறனாளியான என்னால் கடினமான வேலைகளை செய்ய இயலாது. என்னையும், எனது குழந்தைகளையும் இனி யார் காப்பாற்றப்போகிறார்கள்? பிள்ளைகளை எப்படி படிக்க வைக்கப்போகிறேன்? கடனை எப்படி அடைப்பேன்? பிரதமர் மற்றும் முதல்-அமைச்சர் வருகையின்போது அவர்களை சந்திக்க எங்களை அழைத்துச்சென்றார்கள். அப்போது அவர்கள், உங்களுக்கு வேண்டிய உதவிகளையும், நிவாரணங்களும் தருவோம் என்று கூறிச்சென்றார்கள். இதுவரை எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனது குடும்பத்தை காப்பாற்ற எனக்கு அரசு வேலை ஏதாவது வழங்க வேண்டும்.
எனது பிள்ளைகள் நான்கு பேரும் என் கணவர் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் இருக்கும்போது நான் அவரை நினைத்து அழமாட்டேன். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எனது குழந்தைகள், “அப்பா ஏன் இன்னும் வரவில்லை” என்று கேட்டார்கள். அதற்கு அப்பா புதுச்சேரி பகுதியில் தொழில் செய்வதால் வரவில்லை. நாம் வழக்கமாக செல்வதுபோல, ஜனவரி மாதம் 21-ந் தேதி (இன்று) வேளாங்கண்ணி கோவில் செல்ல வந்துவிடுவார் என்று கூறி வைத்திருக்கிறேன். வருகிற 21-ந் தேதி அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்? என்று எனக்குத் தெரியவில்லை. எனவே ஒவ்வொரு நாளும் எனது கணவரையும், தந்தை, அண்ணன் உள்ளிட்ட உறவினர்களை நினைத்து நானும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது.
என்னைப்போல் எனது அண்ணன் அந்தோணி ராஜை நினைத்து அண்ணி ஜோமியும், என் தந்தை, அண்ணன், மருமகனை நினைத்து என் தாயார் ஜெர்மினம்மாளும் அழுதுகொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பமே ஆண் யாருடைய ஆதரவும் இன்றி தவிக்கிறது.
அரசு நிவாரணமாக ரூ.20 லட்சம் கொடுத்துவிட்டால் எங்களுக்கு எல்லாம் கிடைத்துவிடாது. நாங்கள் தவிக்கும் இந்த நிலை எதிரிகளுக்குக்கூட ஏற்படக்கூடாது. எனது கணவரை என் கண் முன்னால் அரசாங்கம் கொண்டு வந்து நிறுத்தினால் போதும். வீடு, வாசலை விற்று, சொத்துகளை விற்று, கடன் பெற்று நான் அரசாங்கத்துக்கு ரூ.25 லட்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
அரசாங்கங்கள் மீனவ மக்களை வஞ்சித்துவிட்டது. புயல் வீசிய ஒருசில நாட்களிலேயே கப்பல், விமானம் மூலம் தேடியிருந்தால் கடலில் தத்தளித்த மீனவ மக்கள் பலரை மீட்டிருக்கலாம். அதைச் செய்ய அரசு தவறிவிட்டது. நாங்கள் படும் வேதனைக்கும், துயரத்துக்கும் ஒரு நாள் இந்த அரசாங்கங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்.
இவ்வாறு வேதனையோடு கூறினார், ஷர்மிளா.
நம்பிக்கையோடு நாளை கடத்துகிறார்கள்
கடல் சீற்றமாக காணப்படும்போதும், காற்று அதிகமாக இருக்கும் காலங்களிலும், கடலில் ராட்சத அலை எழும்பும். அப்போது அலைகள் 15 அடி முதல் 20 அடி உயரத்துக்கு எழும்பி மீண்டும் கடலிலேயே விழுந்து மற்றொரு அலையாக எழும்பும். ஆனால் ஒகி புயலின்போது நடுக்கடலில் ஏற்பட்ட அலைகள் வித்தியாசமான முறையில் சுழற்றி இருக்கிறது.
பெரிய ராட்சத உருளைகளை கடலில் உருளச்செய்தால் எப்படி உருளுமோ அதைப்போல், ஆக்ரோஷமாக எழுந்த அலைகள் உருளைபோல் உருண்டபடி பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால்தான் பல விசைப்படகுகள் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டன என்றும் உயிர்தப்பிய மீனவர்கள் கூறுகிறார்கள்.
சாதாரண படகுகளைவிட விசைப்படகுகள் மிகவும் பெரியது. ஒரு விசைப்படகு வாங்க குறைந்தது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால்தான் முடியும். வசதி படைத்தவர்கள் சொந்தமாக விசைப்படகுகளை வாங்கி, அவற்றில் கூலிக்கு மீன்பிடி தொழிலாளர்களை அமர்த்தி தொழிலை நடத்துவார்கள்.
விசைப்படகு வைத்து தொழில் செய்ய விரும்பும் வசதி குறைந்த மீனவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களை பங்குதாரர்களாக சேர்த்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டோ, கடன் பெற்றோ விசைப்படகுகளை வாங்கி மீன்பிடி தொழில் செய்வார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தை முதலீடுக்கு தகுந்தபடி பிரித்துக் கொள்வார்கள்.
இவ்வாறு உறவினர்கள் மற்றும் நண்பர்களாக சேர்ந்தும், கடன் பெற்றும் விசைப்படகு வாங்கி தொழில் செய்த பலரும் இந்த ஒகி புயலில் சிக்கி மாயமாகி உள்ளனர். புயலால் அவர்களது படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று, நான்கு பேர் அல்லது நெருங்கிய உறவினர்களை இழந்து நிற்கும் குடும்பங்கள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக தந்தை, மகன், மருமகன் என குடும்பத்தில் உள்ள அத்தனை ஆண்களையும் இழந்து, ஆண் ஆதரவின்றி தவிக்கும் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள சோகமோ தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
இத்தகைய குடும்பங்களில் ஏற்பட்டுள்ள அழுகுரல் ஓயவில்லை. அதனால் அவர்கள் நித்தமும் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர். மாயமான மீனவர்கள் இனி திரும்புவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கு போய்விட்டது. ஆனால் சில மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது உறவினர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறார்கள்.
குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை
சின்னத்துறையைச் சேர்ந்த ரெம்மியாஸ் என்பவருக்கு ராகேஷ் (31) என்ற மகன், ரெம்மியா, ரெம்ஷா, ரெபிஷா ஆகிய 3 மகள்கள். ரெம்மியாஸ் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இதற்காக கடன் பெற்று சொந்தமாக ஒரு விசைப்படகை அவர் வாங்கியிருந்தார்.
இந்தநிலையில் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி ரெம்மியாஸ், அவருடைய மகள் ரெம்ஷாவின் கணவர் ஆன்றனி உள்ளிட்டோர் கேரள கடல் பகுதிக்கு விசைப்படகில் சென்றனர். அப்போது இவர்கள் சென்ற விசைப்படகின் மீது மர்ம கப்பல் ஒன்று மோதிய விபத்தில் ரெம்மியாஸ், ஆன்றனி ஆகிய 2 பேரும் நடுக்கடலில் இறந்தனர்.
இந்த துக்கத்தால் நிலைகுலைந்துபோன குடும்பம் மீண்டு வந்து கொண்டிருந்தது. ஆனால், ‘பட்ட காலிலே படும்’ என்று கூறுவார்களே, அந்த பழமொழியானது இந்த குடும்பத்துக்கு பொருந்திவிட்டது.
தத்தளிக்கும் குடும்பத்தை காப்பாற்ற ரெம்மியாஸ்சின் மகன் ராகேஷ், அவருடைய மற்றொரு அக்காளின் கணவர் ஆன்றோஜெயின் (37) ஆகியோர் உள்பட 4 பேர், ஒகி புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க வள்ளத்தில் சென்றிருந்தபோது, அவர்கள் 4 பேரும் புயலில் சிக்கி மாயமானார்கள். 1½ மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் தங்களை பெரிதும் பாதித்துவிட்டது என, ரெம்மியாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சோகத்துடன் கூறுகிறார்கள்.
கடலில் மாயமான ராகேசும், உடன் சென்ற ஆன்றோ ஜெயினும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது அந்தக்குடும்பம்.
இதுதொடர்பாக ரெம்மியாசின் தங்கை ரெபிஷா கண்ணீர் மல்க கூறியது:-
எங்கள் மீனவ கிராமத்தில் ரெம்மியாஸ் குடும்பம் என்றால் ஒரு மரியாதை உண்டு. அந்த அளவுக்கு சிறந்த பெயர் பெற்ற எனது தந்தையும், எனது அக்காள் கணவர் ஆன்றனியும் கேரளாவில் விசைப்படகு மீது கப்பல் மோதிய சம்பவத்தில் இறந்து போனார்கள்.
எனது தந்தை மறைவுக்குப்பிறகு எனது அண்ணன் ராகேஷ்தான் எங்களது குடும்பத்தை கவனிக்கக்கூடியவனாக இருந்தான். அவன் இதுவரை குமரி மாவட்ட கடல் பகுதிக்கு சென்றதே கிடையாது. எனது தந்தை இறந்தபிறகு குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 30-ந் தேதி அன்றுதான் மீன்பிடிக்க எனது அண்ணன் ராகேஷ் மற்றும் மற்றொரு அக்காள் கணவர் உள்ளிட்ட 4 பேர் சென்றனர். அதிகாலையில் சென்றதால் மதியத்துக்குள்ளாக கரை திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம்.
ஆனால் அவர்களது படகு புயலில் சிக்கியுள்ளது. அண்ணன் மற்றும் அக்காள் கணவர் உள்ளிட்ட 4 பேர் சென்றதில் ஒருவரின் உடல் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டுவந்து அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் ஆண்கள் யாருமின்றி தவிக்கும் எங்களை கடவுள் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே எனது அண்ணனும், அக்காள் கணவரும் எப்படியும் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
நான் பி.ஏ. (ஆங்கிலம்) படித்துள்ளேன். ஏற்கனவே கப்பல் மோதியதில் எனது தந்தை மற்றும் அக்காள் கணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு, தமிழக அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. கேரள அரசும் நிவாரணம் வழங்கவில்லை. இந்தநிலையில் ஒகி புயலில் சிக்கி எனது அண்ணனும், மற்றொரு அக்காள் கணவரும் கடலில் காணாமல் போய் உள்ளனர். தமிழக அரசு எங்களின் நிலையை அறிந்து தகுந்த நிதி உதவியும், அரசு வேலையும் தந்தே ஆக வேண்டும்.
எனது அண்ணன் ராகேசுக்கு, என் தந்தை இருந்தபோது, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, டிசம்பர் மாதத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். எனது தந்தையும், அக்காள் மாப்பிள்ளையும் கப்பல் மோதிய சம்பவத்தில் இறந்ததால் திருமணத்தை தள்ளி வைத்திருந்தோம்.
அதற்குள் ஒகி புயலில் சிக்கி என் அண்ணன் காணாமல் போய்விட்டான். வெளிநாட்டு வேலைக்கு சென்றிருந்த அவன் அங்கேயே இருந்திருந்தால் இந்த நிலை அவனுக்கு ஏற்பட்டிருக்காது. ஊர் திரும்பிய அவன் ஒரு விபத்தில் சிக்கினான். அதில் இருந்து மீண்டான். அதற்குள் ஒகி புயலில் மாட்டிக்கொண்டான்.
எனது மூத்த அக்காளின் 2 பிள்ளைகளையும், இளைய அக்காளின் 3 பிள்ளைகளையும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த பிஞ்சு குழந்தைகள் தங்களது அப்பா என்ன ஆனார்கள்? என்று இதுவரை தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் தங்கள் தந்தையை தேடி அழும் குழந்தைகளுக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. எங்களையே நாங்கள் ஆறுதல் படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகிறோம்.
இவ்வாறு ரெபிஷா கூறினார்.
ஒரே வீட்டில் தாய், மகள்கள், குழந்தைகள் சோகத்துடன் இருப்பதை பார்த்து உறவினர்கள் வந்து ஆறுதல் கூறிச் செல்கிறார்கள்.

Related Tags :
Next Story