அடித்து வீழ்த்த வேண்டியதில்லை.. தொட்டாலே போதும்..


அடித்து வீழ்த்த வேண்டியதில்லை.. தொட்டாலே போதும்..
x

சிலம்பக் கலையை தனது வாழ்க்கையாக்கிக் கொண்டவர் முருகேசன். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை சேர்ந்த இவர், 12 வயதில் இந்த கலையில் காலடி எடுத்து வைத்தார்.

33 வருடங்களாக சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி- கல்லூரி மாணவ, மாணவி களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்திருக்கிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் இவர் பயிற்சியளித்திருக்கிறார்.

தேனி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் காலை நேரத்தில் கிராமப்புற சிறுமிகளுக்கும், போலீசார் வீட்டு பிள்ளை களுக்கும் சிலம்பம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த முருகேசனை பேட்டிக்காக சந்தித்தோம். அவரோடு நமது உரையாடல்:

சிலம்பக் கலையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

அது பிறப்பிலேயே வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஊரில் எங்களை கண்ணாயி வம்சம் என்று அழைப்பார்கள். கண்ணாயி என்பது எனது தாத்தா முத்துச்சாமியின் அக்காள். எனது தாத்தாவும் அவருடைய அக்காவும் சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவர்கள். எனது தாத்தா போடி அரண் மனையின் மெய்க்காப்பாளராக இருந்தார். சிலம்பாட்டத்தில் அவரை வீழ்த்த ஆள் கிடையாது என்ற நிலை இருந்தது. எனது தாத்தா சிலம்பாட்டத்தில் களம் இறங்குகிறார் என்றால், அவருடைய அக்காள் கையில் ஒரு குவளை தண்ணீருடன் நிற்பாராம். தனது அண்ணனிடம் அடி வாங்கி தோல்வி அடைந்து விழுபவருக்கு கொடுப்பதற்காக அதை கொண்டு வருவாராம். பின்னர், எனது தந்தை பழனிசாமியும் சிலம்ப பயிற்சியளித்தார். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

கற்றுக்கொண்ட கலை ஒரு பொது சொத்து. அதை அடுத்த தலைமுறைகளிடம் கொடுத்து பத்திரப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்பதை இலக்காக கொண்டு பயிற்சி அளிக்கிறேன். கிராமப்புறங்களில் இருந்தும் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும். அதனால் திறமையானவர்களை கண்டறிந்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக் கொண்டதால் தேனி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தேன். தேனி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றிய பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் என்னிடம் சிலம்ப பயிற்சி பெற்றுள்ளனர். நான் இளம் வயதில் பல போட்டிகளில் வென்று பரிசுகள் பெற்றுள்ளேன். கராத்தே, குங்பூ, வர்மக்கலை போன்றவைகளையும் கற்றுள்ளேன். ஆயுதப்படை போலீசாருக்கு பிடிவரிசை, வர்மக்கலை நுணுக்கங்கள் குறித்து பயிற்சி அளித்துள்ளேன். தற்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவி களுக்கு தற்காப்பு கலைப் பயிற்சியும் அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்களில் 334 பேர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் 153 பேர் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

சிலம்பாட்டத்தில் காலத்துக்கு தக்கபடி எத்தகைய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன?

பழங்கால தமிழகத்தில் சிலம்பம் வீரக்கலையாகவும், போர்க்கலையாகவும் இருந்தது. ஒருவரை எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வீழ்த்தினால் தான் வெற்றி என்ற நிலை அப்போது இருந்தது. திறமையான நபரை பலர் சூழ்ந்து கொண்டு கம்பு வீசுவார்கள். அனைவரையும் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் மாவீரன் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அடுத்து ஆயுதங்கள் பல வந்த பின்னர் சிலம்பத்தில் ஆக்ரோஷம் குறைந்தது. முன்பு போல், அடித்து வீழ்த்த வேண்டியதில்லை. எதிராளி வீசும் கம்பை தடுத்தல், எதிராளி யின் உடலில் சிலம்புக் கம்பால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடித்து வீழ்த்தி வாகை சூடும் காலத்தில் இருந்து, தொட்டு வீழ்த்தி வெற்றிபெறும் காலம் வந்திருக்கிறது.

உங்கள் பிள்ளைகளும் சிலம்ப பயிற்சியாளர்களா?

எனக்கு 2 மகன்கள், 2 மகள்கள். 4 பேரும் சிலம்பம் கற்றுள்ளனர். மூத்த மகன் செல்வேந்திரன் தற்போது மகாராஷ்டிராவில் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் வேலை பார்க்கிறார். அங்கு பணியாற்றும் சக போலீசாருக்கு அவர் சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார். இளைய மகன் ராமர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாநில நடுவராகவும் உள்ளார். அவரும் என்னோடு இணைந்து பயிற்சி அளித்து வருகிறார். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இந்த கலை நீடிக்க வேண்டும். ஒலிம்பிக் வரை சென்று தமிழக கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக முடிந்தவரை அதிக வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும்.

கட்டபொம்மனும்.. ஊமைத்துரையும்..

சிலம்பு என்ற சொல்லில் இருந்து சிலம்பம் உருவானது. சிலம்பு என்றால் ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் போது உருவாகும் ஒலியை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மெய்ப்பாடம், உடற்கூறு, மூச்சுப்பயிற்சி, குத்து வரிசை, தட்டுவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலியன சிலம்பக் கலையின் முக்கியக் கூறுகளாகும். சிலம்பாட்டத்துக்கு பயன்படுத்தும் தடி அல்லது பிரம்பு தரையில் இருந்து நெற்றிப் புருவம் வரை யிலான உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். சிலம்பாட்டத்தில் துடுக்கண்டம், குறவஞ்சி, மறைக்காணம், அலங்காரச் சிலம்பம், போர் சிலம்பம், பனையேறி மல்லு, கதாளி, நாகசீறல், கள்ளன் கம்பு போன்ற பல வகைகள் உண்டு. சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட சுற்று முறைகள் உள்ளன. சுருள்கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாய் பிடிவரிசை, கோடாரிக் கேடயம், வேல்கம்பு, சுருள் வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு, மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றவை சில சுற்று முறைகள். சிலம்பத்தில் ஒத்தைச்சுவடு, பிரிவுச்சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டப்பிரிவு, மடுசிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், ஊமைத்துரை சுருள்பட்டா வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினார்கள்.

சிலம்பு என்ற சொல்லில் இருந்து சிலம்பம் உருவானது. சிலம்பு என்றால் ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் போது உருவாகும் ஒலியை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெய்ப்பாடம், உடற்கூறு, மூச்சுப்பயிற்சி, குத்து வரிசை, தட்டுவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலியன சிலம்பக் கலையின் முக்கியக் கூறுகளாகும்.

சிலம்பாட்டத்துக்கு பயன்படுத்தும் தடி அல்லது பிரம்பு தரையில் இருந்து நெற்றிப் புருவம் வரை யிலான உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

சிலம்பாட்டத்தில் துடுக்கண்டம், குறவஞ்சி, மறைக்காணம், அலங்காரச் சிலம்பம், போர் சிலம்பம், பனையேறி மல்லு, கதாளி, நாகசீறல், கள்ளன் கம்பு போன்ற பல வகைகள் உண்டு.

சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட சுற்று முறைகள் உள்ளன. சுருள்கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாய் பிடிவரிசை, கோடாரிக் கேடயம், வேல்கம்பு, சுருள் வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு, மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றவை சில சுற்று முறைகள்.

சிலம்பத்தில் ஒத்தைச்சுவடு, பிரிவுச்சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டப்பிரிவு, மடுசிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன.

வீரபாண்டிய கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், ஊமைத்துரை சுருள்பட்டா வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினார்கள்.

Next Story