மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு சிலை நெல்லையில் நடந்த பாராட்டு விழாவில் வி.ஜி.சந்தோஷம் தகவல்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு சிலை நெல்லையில் நடந்த பாராட்டு விழாவில் வி.ஜி.சந்தோஷம் தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2018 3:00 AM IST (Updated: 22 Jan 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட உள்ளது என்று வி.ஜி.சந்தோஷம் கூறினார்.

நெல்லை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட உள்ளது என்று வி.ஜி.சந்தோஷம் கூறினார்.

கருத்தரங்கு- பாராட்டு விழா

பொதிகை தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின கருத்தரங்கம் மற்றும் சிறப்பான முறையில் தமிழ்பணி செய்துவருவதற்கும், பிரதமரிடம் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றமைக்கும் வி.ஜி.சந்தோஷத்துக்கு பாராட்டு விழா நேற்று நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத்தலைவர் ரமேஷ் ராஜா தலைமை தாங்கினார். எழுத்தாளர் நாறும்பூநாதன் முன்னிலை வகித்தார். பொதிகை தமிழ் சங்க தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பேராசிரியை உமாதேவி, அந்தோணி குரூஸ் அடிகளார், சைவ சபை தலைவர் வள்ளிநாயகம், வான்மதி, கன்னிக்கோவில் ராஜா, நல்லாசிரியர் செல்லப்பா, பேராசிரியை உஷா தேவி, திருக்குறள் முருகன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

வி.ஜி.பி. உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளுவருக்கு சிலை

வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் மூலம் பல்வேறு நாடுகளில் திருவள்ளுவருக்கு சிலைகள் நிறுவி வருகிறோம். முதன் முதலில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷ் என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலையை அமைத்தோம். அதன் பிறகு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சிலைகளை நிறுவி உள்ளோம். இலங்கையில் மட்டும் 16 இடங்களில் சிலைகளை வைத்துள்ளோம். தற்போது ஜப்பான், கனடாவிலும் சிலை நிறுவ உள்ளோம்.

இதேபோல் பல்கலைக்கழகங்களிலும் திருவள்ளுவருக்கு சிலைகளை அமைக்க உள்ளோம். பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் திருக்குறளையும், திருவள்ளுவரின் புகழையும் அறிந்து கொள்ள இதுஉதவும்.

நெல்லையில் சிலை


இதைதொடர்ந்து 37-வது இடமாக தென் மாவட்டத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ உள்ளோம். இதற்காக 5½ அடி உயரத்தில் கல் சிலை தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அனுமதி பெற்று விரைவில் அந்த சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும்.

இவ்வாறு வி.ஜி.சந்தோஷம் கூறினார்.

விழா முடிவில் பாப்பாக்குடி செல்வமணி நன்றி கூறினார்.

Next Story