கார் கவிழ்ந்து 2 பேர் பலி வக்கீல் உள்பட இருவர் படுகாயம்


கார் கவிழ்ந்து 2 பேர் பலி வக்கீல் உள்பட இருவர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Jan 2018 4:30 AM IST (Updated: 22 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். வக்கீல் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மணப்பாறை,

நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது (வயது 26), முகமது யாசீன் (40), அயூப் (34). இவர்கள் ஒரு வழக்கு சம்பந்தமாக காரில் சென்னை சென்று விட்டு, பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காரை பீர்முகமது (27) என்பவர் ஓட்டினார். கார் நேற்று அதிகாலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே கல்லாமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் அந்த கார் சாலையில் அங்கும் இங்குமாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சாகுல் ஹமீது, முகமது யாசீன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அயூப், பீர்முகமது ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இறந்தவர்களின் குடும்பத்தினர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் படுகாயம் அடைந்த அயூப் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் ஆவார். விபத்தில் இறந்த முகமது யாசீன் டீத்துள் வியாபாரி ஆவார். 

Next Story