பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் அறிவிப்பு


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2018 4:15 AM IST (Updated: 22 Jan 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜி.கே.வாசன் கூறினார்.

கும்பகோணம்,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் த.மா.கா. சார்பில் வருகிற 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கும்பகோணத்தில் எனது (ஜி.கே.வாசன்) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

டெல்டா விவசாயிகளுக்கு எதிராக கர்நாடக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. ரெயில் கட்டணத்தை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்த உள்ளது. 80 சதவீத மக்கள் ரெயில் மூலமாக தான் பயணம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் ரெயிலில் தான் பயணம் செய்கின்றனர்.

மண்டல மாநாடு

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. கவர்னர் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். ரஜினி, கமல் முதலில் கட்சி தொடங்க வேண்டும். இனி வருங்காலத்தில் தமிழகத்தில் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. தேர்தல் காலத்தில் எங்களுக்கு மதிப்பு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமையும்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி கோவையிலும், 10-ந் தேதி தஞ்சையிலும், 17-ந் தேதி கிருஷ்ணகிரியிலும், 23-ந் தேதி மதுரையிலும், 28-ந் தேதி விழுப்புரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல மாநாடு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் முதல் கட்சி வளர்ச்சிக்காக கிராமங்கள் தோறும் எங்களது பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜாங்கம், கருப்பண்ண உடையார், மாநில செயலாளர்் அசோக்குமார், இணைச்செயலாளர் சாதிக் அலி, நகர தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story