கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு


கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2018 4:00 AM IST (Updated: 22 Jan 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

கோலார் தங்கவயல்,

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

இலவச திருமணம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா தேவரகுடிபள்ளி கிராமத்தில், பாகேபள்ளி தொகுதி எம்.எல்.ஏ. சுப்பாரெட்டி பெயரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் நேற்று 501 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முதல்-மந்திரி சித்தராமையா தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசியதாவது:-

எடியூரப்பா மண்ணின் மைந்தன் என்றும், தேவேகவுடா விவசாயியின் மகன் என்றும் கூறி வருகின்றனர். அப்போது நாங்கள் எல்லாம் யார்? தேர்தல் நெருங்குவதால் பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) ஆகிய 2 கட்சிகளும் போட்டிக் கொண்டு மக்கள், விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாக காட்டி கொள்கிறார்கள். இவ்வளவு நாட்கள் அவர்கள் எங்கு சென்றனர்? என்பது தெரியவில்லை.

பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி செய்த போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏதாவது நல்ல திட்டத்தை செய்து உள்ளார்களா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். நாங்கள் எங்கள் ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறோம்.

காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்

நாங்கள் செய்து உள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறியே நாங்கள் ஓட்டு கேட்போம். ஆனால் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மக்களிடம் என்ன சொல்லி ஓட்டு கேட்க போகிறார்கள்? என்று தெரியவில்லை.

சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.12 ஆயிரம் கோடி செலவில் எத்தினஒலே திட்டம் அமல்படுத்தப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் இந்த திட்டத்தை குறை கூறி வருகின்றனர். அவர்களுக்கு குறைகூறுவது வாடிக்கையாகி விட்டது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வீரப்ப மொய்லி(சிக்பள்ளாப்பூர்), கே.எச்.முனியப்பா (கோலார்), சுப்பாரெட்டி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமணத்தில் கலந்து கொண்ட சித்தராமையாவுக்கு, காங்கிரசார் ஒரு ஆட்டை பரிசாக வழங்கினர்.

Next Story