பரிவர்த்தனா யாத்திரையை தொடர்ந்து பேரணிகள் நடத்த பா.ஜனதா திட்டம்


பரிவர்த்தனா யாத்திரையை தொடர்ந்து பேரணிகள் நடத்த பா.ஜனதா திட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2018 3:15 AM IST (Updated: 22 Jan 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க புதிய வியூகம் வகுத்துள்ள பா.ஜனதா கட்சி பரிவர்த்தனா யாத்திரையை தொடர்ந்து சாதி அடிப்படையில் மாநிலம் முழுவதும் பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க புதிய வியூகம் வகுத்துள்ள பா.ஜனதா கட்சி பரிவர்த்தனா யாத்திரையை தொடர்ந்து சாதி அடிப்படையில் மாநிலம் முழுவதும் பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளது.

தேர்தல் பிரசாரங்கள்

கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் பிரசாரங்களை தொடங்கி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ‘நவ கர்நாடக நிர்மானா’ (புதிய கர்நாடகத்தை உருவாக்குவோம்) என்ற பெயரில் சித்தராமையா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலகோடி ரூபாய் செலவில் வெவ்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

‘விகாஷ வாகினி யாத்திரை“ (வளர்ச்சிக்கான பயணம்) எனும் பெயரில் ஜனதா தளம்(எஸ்) கட்சித் தலைவர் குமாரசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ‘பரிவர்த்தனா யாத்திரை (மாற்றத்துக்கான பயணம்) என்ற பெயரில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதாவினர் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் நடைபெறும் ‘பரிவர்த்தனா யாத்திரை’ வருகிற 25-ந் தேதி மைசூருவில் நிறைவடைகிறது.

பேரணிகள்

இதன் தொடர்ச்சியாக கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவதற்காக புதிய வியூகத்தை பா.ஜனதா வகுத்துள்ளது. அதாவது, சாதி அடிப்படையிலான பேரணிகளை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக பா.ஜனதா சார்பில் பொதுப்பேரணி அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும், பேரணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த பேரணியில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மாநிலத்தில் பா.ஜனதாவின் பலத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் உள்பட வெவ்வேறு சாதி மக்களின் வாக்குகளை கவரும் வகையில் தனித்தனியே மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் சாதி அடிப்படையிலான பேரணிகள் நடக்க உள்ளது. இந்த பேரணிகளின் மூலம் ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் மாநில அரசு இழைத்த தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களின் வாக்குகளை தங்களின் பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சிகள் எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story