தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கழிவறை கட்டுவதில் மராட்டியம் முதலிடம்


தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கழிவறை கட்டுவதில் மராட்டியம் முதலிடம்
x
தினத்தந்தி 22 Jan 2018 3:45 AM IST (Updated: 22 Jan 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ், கழிவறை கட்டுவதில் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது.

மும்பை,

தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ், கழிவறை கட்டுவதில் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது.

தூய்மை பாரத திட்டம்


திறந்தவெளியில் மலம் கழிப்பதை முடிவுக்கு கொண்டு வரவும், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்கவும், ‘தூய்மை பாரதம்’ திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின்கீழ், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் 66 லட்சத்து 42 ஆயிரம் கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, 64 சதவீதம், அதாவது 42 லட்சத்து 72 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

மராட்டியம் முதலிடம்

இதில், மராட்டிய மாநிலம் முதலிடம் வகிக்கிறது. மராட்டியத்தில், கடந்த நவம்பர் வரையிலான நிலவரப்படி, தூய்மை பாரத திட்டத்தின்கீழ், வீடுகளில் 6 லட்சத்து 33 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டு இருக்கின்றன.

அடுத்தபடியாக குஜராத்தில் வீடுகளில் 5 லட்சத்து 60 ஆயிரம் கழிவறைகளும், மத்திய பிரதேசத்தில் 4 லட்சத்து 93 ஆயிரம் கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4 லட்சத்து 29 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன.

பொது கழிவறை

இது மட்டுமின்றி, பஸ் நிலையம், ஆஸ்பத்திரி உள்ளிட்ட பொது இடங்களில், பொது கழிவறை அமைப்பதிலும் மராட்டியம் முன்னிலை வகிக்கிறது. மராட்டியத்தில், கழிவறை அறைகளின் எண்ணிக்கை அடிப்படையில், சுமார் 1 லட்சம் பொது கழிவறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 22 ஆயிரத்து 350 பொது கழிவறைகளும், உத்தர பிரதேசத்தில் 17 ஆயிரத்து 205 பொது கழிவறைகளும், சத்தீஸ்காரில் 17 ஆயிரத்து 83 கழிவறைகளும், டெல்லியில் 17 ஆயிரத்து 8 கழிவறைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன.

Next Story