கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது


கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 Jan 2018 4:30 AM IST (Updated: 22 Jan 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரியில் கல்லூரி மாணவியிடம் செல்போன், நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி சீதாபதி நகரில் கடந்த 18-ந் தேதி கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் பேசியபடி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மொபட்டில் வந்த 2 வாலிபர்கள், கல்லூரி மாணவியிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிக்க முயன்றனர்.

ஆனால் அந்த மாணவி உஷாரானதால் அவர்களால் செல்போனை பறிக்க முடியவில்லை. சிறிது தூரம் சென்ற அவர்கள், மீண்டும் திரும்பி வந்து கல்லூரி மாணவி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

அப்போது மாணவி கூச்சலிட்டார். அதே நேரத்தில் ஒரு காரும் அங்கு வந்ததால் சங்கிலியையும் பறிக்க முடியாமல் வாலிபர்கள் வேகமாக மொபட்டில் தப்பி சென்று விட்டனர்.

இந்த காட்சிகள் அங்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான தனிப்படையினர், கண்காணிப்பு கேமராவில் பதிவான மொபட்டின் பதிவுஎண்ணை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் கல்லூரி மாணவியிடம் செல்போன் மற்றும் சங்கிலியை பறிக்க முயன்றது பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரைச்சேர்ந்த கிஷோர்குமார் (வயது 20), நடராஜன்(19) என்பது தெரியவந்தது.

இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தபோது, கல்லூரி மாணவியிடம் செல்போன், நகை பறிக்க முயன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கிஷோர்குமார், நடராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story