‘கர்நாடக புகழ்பாடியதில் அரசியல் நோக்கம் இல்லை’ மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம்


‘கர்நாடக புகழ்பாடியதில் அரசியல் நோக்கம் இல்லை’ மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம்
x
தினத்தந்தி 23 Jan 2018 4:15 AM IST (Updated: 23 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

“கர்நாடக புகழ்பாடியதில் அரசியல் நோக்கம் இல்லை” என்று மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம் அளித்தார். #tamilnews

மும்பை,

“கர்நாடக புகழ்பாடியதில் அரசியல் நோக்கம் இல்லை” என்று மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம் அளித்தார்.

மராட்டியம்-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது, பெலகாவி மாவட்டம். இங்கு மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசித்தாலும், கர்நாடக மாநில ஆளுகைக்கு உட்பட்டதாக உள்ளது. இதனை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் கோகக் தாலுகா தவக் கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மராட்டிய வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், கர்நாடக மந்திரி ரமேஷ் ஜார்கிஹோலி என்பவரும் பங்கேற்றார்.

அப்போது, கன்னடத்தில் பேசுமாறு மந்திரி சந்திரகாந்த் பாட்டீலிடம், உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தினர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, கர்நாடகத்தை புகழ்ந்து இரண்டு வரிகள் கன்னடத்தில் அவர் பாடினார். மராத்தியில் எழுதி கொடுத்ததை படித்து அவர் கன்னடத்தில் பாடினார்.

ஏற்கனவே, மராட்டியம்- கர்நாடகா இடையே எல்லை பிரச்சினை நீருபூத்த நெருப்பாக இருக்கும் நிலையில், மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், கர்நாடகாவுக்கு ஆதரவாக புகழ்ந்து பாடியது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே (தேசியவாத காங்கிரஸ்) கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “எல்லை பிரச்சினையில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட சந்திரகாந்த் பாட்டீல், கர்நாடகாவுக்கு ஆதரவாக துதி பாடியதன் மூலம், அங்கு வசிக்கும் மராத்திபேசும் மக்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி விட்டார்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடகாவை புகழ்ந்து பாடியது ஏன்? என்பதற்கு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம் அளித்தார். அதில், “கர்நாடகாவை புகழ்ந்து பாடியது சாதாரணமாக அரங்கேறிய நிகழ்வு. இதில், அரசியல் நோக்கம் ஏதுமில்லை” என்று கூறியுள்ளார்.

Next Story