சமூகநலத்துறையின் கண்காணிப்பு இல்லத்தில் மீண்டும் கவர்னர் ஆய்வு நடவடிக்கை எடுக்க உத்தரவு


சமூகநலத்துறையின் கண்காணிப்பு இல்லத்தில் மீண்டும் கவர்னர் ஆய்வு நடவடிக்கை எடுக்க உத்தரவு
x
தினத்தந்தி 23 Jan 2018 4:15 AM IST (Updated: 23 Jan 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பம் கண்காணிப்பு இல்லத்தில் மீண்டும் ஆய்வு நடத்திய கவர்னர், அங்கு பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தில் சமூக நலத்துறையின் கண்காணிப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லம், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, பெண்களுக்கான தொழிற்பயிற்சி இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பு இல்லத்துக்கு நேற்று முன்தினம் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் சரியாக நடைபெறவில்லை, இல்லத்தில் பணிபுரிபவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் வழங்கப்படவில்லை. ஊழியர்கள் சரியாக வேலைக்கு வருவது இல்லை. தினக்கூலி சம்பளத்தில் பணிபுரிபவர்கள் வேலைக்கு வராமலேயே சம்பளம் பெற்று வருவது தெரியவந்தது. இவற்றை சரிசெய்ய கண்காணிப்பு இல்ல நிர்வாகிக்கு கவர்னர் உத்தரவிட்டார். மேலும் முறையாக நிர்வாகத்தை கவனிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கூறினார்.

மீண்டும் ஆய்வு

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை மீண்டும் அங்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். நேற்று முன்தினம் ஆய்வு நடத்தியதால் மறுநாளே கவர்னர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கண்காணிப்பு இல்லத்துக்குள் சென்ற கவர்னர் பணியாளர்கள் பதிவேட்டை ஆய்வு செய்தார்.

அப்போது பலர் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. அவர்களிடம் விளக்கம் கேட்கும்படியும், உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று முன்தினம் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டு உள்ளனவா? என்றும் கவர்னர் பார்வையிட்டார். ஆய்வின்போது அரசு செயலாளர் மிகிர்வரதன், சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story