ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ரூ.66½ லட்சம் நிவாரண நிதி கலெக்டர் தகவல்


ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ரூ.66½ லட்சம் நிவாரண நிதி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2018 4:15 AM IST (Updated: 23 Jan 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ரூ.66½ லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

சமீபத்தில் ஏற்பட்ட ஒகி புயலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் சிக்கினர். இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். 2 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. 3 பேரை காணவில்லை. இந்த நிலையில் வேறு மீனவர்கள் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என்பது குறித்த விவரங்களை சேகரிப்பதற்காக 6 தாலுகாக்களில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் தலைமையிலான இந்த குழுவில் மீன்வளத்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து கிளார்க், மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பிரதிநிதிகள் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் மீனவ கிராமங்களில் வீடு, வீடாக சென்று மீனவர்கள் காணாமல் போய் உள்ளார்களா? என்ற விவரத்தை சேகரிக்க உள்ளனர்.

மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் 488.94 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் 1,143 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிவாரண தொகையாக எக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.66 லட்சத்து 68 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை 3 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இது தவிர பாதிக்கப்பட்ட 1.143 விவசாயிகளுக்கும் சிறப்பு வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 100 சதவீதம் மானியமாக ரூ.35 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் 75 சதவீதம் தொகை முதல் ஆண்டும், 25 சதவீதம் தொகை 2-வது ஆண்டும் வழங்கப்படும். இதற்கு இதுவரை 1,070 பேர் விண்ணப்பம் கொடுத்து உள்ளனர். மீதம் உள்ளவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கடந்த மாதத்தை விட குறைந்து உள்ளது. ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாநகராட்சியில் 3, 4, 5, 34, 35, 36 ஆகிய வார்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியது. தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் யாரேனும் ஆக்கிரமிப்புகள் செய்து இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடியில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பயனாளிகளிடம் இருந்து கலெக்டர் வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story