பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் 19 பேர் கைது


பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் 19 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2018 4:30 AM IST (Updated: 23 Jan 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பிச்சை எடுத்தும், மாட்டு வண்டியில் வந்தும் போராட்டம் நடத்தினர்.

சேலம்,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பல மாவட்டங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் முருகேசன் தலைமையில் ஏராளமானவர்கள் நேற்று காலை சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள், பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளியதாக கூறி பாக்குமட்டை தட்டை ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இனி தொட்டில் கட்டி தான் பயணிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தொட்டில் கட்டி அதில் சிறுவனை உட்கார வைத்து 2 பேர் தூக்கி வந்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் முருகேசன் கூறும்போது, ‘பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை திரும்ப பெறும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும்‘ என்றார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு, கிழக்கு, தாலுகா குழுக்கள் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாநகர செயலாளர் ரமணி, சேலம் தாலுகா செயலாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் மாட்டு வண்டியில் கட்சி கொடி ஏந்தியபடி வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story