கர்நாடக தேர்தலில் களம் காண விரும்பும் மடாதிபதிகள்


கர்நாடக தேர்தலில் களம் காண விரும்பும் மடாதிபதிகள்
x
தினத்தந்தி 24 Jan 2018 3:02 AM IST (Updated: 24 Jan 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத்தை முன்மாதிரியாக வைத்து கர்நாடக தேர்தலில் களம் இறங்க சில மடாதிபதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிக்கெட் பெறுவது தொடர்பாக கட்சி மேலிடங்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,



கர்நாடக தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட மடாதிபதிகள் ஆர்வமாக உள்ளனர். உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை முன்மாதிரியாக வைத்து தங்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வேண்டி காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி மேலிடங்களை அவர்கள் தொடர்பு கொண்டு உள்ளனர்.

இதனால் வருகிற தேர்தலில் சில தொகுதிகளில் மடாதிபதிகள் வேட்பாளர்களாக களம் காணுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் சில மடாதிபதிகள் பா.ஜனதா மேலிடத்திடம் தங்களுக்கு போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றிய விவரங்கள் வருமாறு:-

பாகல்கோட்டை ராமரூடா மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் பரமராமாரூடா சாமி. இவர் பா.ஜனதா சார்பில் பீலகி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவிடம் பேசியுள்ளதாக தெரிகிறது. ஆனால் கடந்த முறை பீலகி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்த தனது ஆதரவாளரான முருகேஷ் நிரானியை மீண்டும் அந்த தொகுதியில் நிறுத்த எடியூரப்பா விரும்புவதாக கூறப்படுகிறது.

இதனால் பரமராமாரூடா சாமிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க எடியூரப்பா மறுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன்காரணமாக பரமராமாரூடா சாமி, ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பீலகி தொகுதியில் போட்டியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் அவர் குமாரசாமியை தனது மடத்துக்கு அழைத்து இதுதொடர்பாக அவரிடம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல் தார்வார் மாவட்டம் மணகுந்தியில் உள்ள மடத்தின் மடாதிபதியான பசவானந்தரு, கல்கட்டகி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார். இதற்காக அவர் விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள தொண்டர்களின் ஆதரவுகளை பெற்று வருவதுடன், சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பசவானந்தரு கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளேன். கல்கட்டகி தொகுதியில் உள்ள 65 கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எனக்கு ஆதரவு திரட்டி வருகிறேன். தற்போது எனது விவரங்களை அளிக்கும்படி கட்சி மேலிடம் கேட்டுள்ளது. மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா எனக்கு டிக்கெட் வழங்குவதாக கூறியுள்ளார். கல்கட்டகி தொகுதியில் பா.ஜனதா சார்பில் நான் போட்டியிடுவது 90 சதவீதம் உறுதியாகி உள்ளது‘ என்றார்.

பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை போல, காங்கிரஸ் கட்சியும் சில தொகுதிகளில் மடாதிபதிகளை களம்காண செய்ய அந்த கட்சி மேலிடம் பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, பெலகாவி மாவட்டம் அதானியில் மோடகி மடத்தின் மடாதிபதி பிரபு சன்னபசவா சாமியை களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. இதற்கு மடாதிபதி பிரபு சன்னபசவாவும் பச்சைகொடி காட்டியுள்ளார். இதனால் அவர் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் ‘கன்னடநாடு‘ எனும் கட்சியை விஜய் சங்கேஷ்வர் தொடங்கியபோது அந்த கட்சி சார்பில் பசவதர்மா மடத்தின் மடாதிபதி மாதேமகாதேவி மற்றும் மனசுரு ரேவணசித்தேஷ்வரா மடத்தின் மடாதிபதி பசவராஜதேவரு ஆகியோர் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். இதில், மடாதிபதி பசவராஜதேவரு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவாளராக இருப்பதுடன், அவர் சித்தராமையாவின் குருபா சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறக்கவும் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இதேபோல், லிங்காயத் சமுதாயத்துக்கு தனி அங்கீகாரம் வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் மடாதிபதி மாதேமகாதேவிக்கும் வருகிற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்கள் தவிர தட்சிண கன்னடா மாவட்டம் குருபுரா வஜ்ரதேஹி மடத்தின் மடாதிபதி ராஜசேகரானந்தாவும் பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார். இவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் அவர் பண்ட்வால் அல்லது மூடபித்ரி தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் களம்காண வாய்ப்பு உள்ளது.

அத்துடன், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த மடாதிபதி ஜபானந்தாவும் பாவகடா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். தார்வார் மாவட்டம் குந்துகோலில் உள்ள பஞ்சகிருக மடத்தின் மடாதிபதி ஸ்ரீகண்டேஷ்வராவும், குந்துகோல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி பா.ஜனதா கட்சியை நாடியுள்ளார்.

எந்தந்த மடாதிபதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

Next Story