மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்டதால் தகராறு: கட்டிப்புரண்டு சண்டையிட்டவர் கைது


மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்டதால் தகராறு: கட்டிப்புரண்டு சண்டையிட்டவர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2018 4:08 AM IST (Updated: 24 Jan 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற மேற்பார்வையாளரும், வாலிபரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதுதொடர்பாக போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் ஜெயராமன், ரஞ்சித் ஆகியோர் விற்பனையாளராகவும், ஊத்துக்கோட்டையை அடுத்த தண்டலம் அருகே உள்ள ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் (வயது 44) என்பவர் மேற்பார்வையாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்புசாமி (32) என்பவர் டாஸ்மாக் கடைக்கு சென்றார். மதுபாட்டில்களை வாங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக செல்வக்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.

கட்டிப்புரண்டு சண்டை

இதனை கருப்புசாமி தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் கருப்புசாமியை மீட்டு கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், செல்வக்குமாரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பாக செல்வக்குமார் மற்றும் கருப்புசாமி தனித்தனியாக சோழவரம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்தனர். செல்வக்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. 

Next Story