இந்திய ரிசர்வ் பட்டாலியன் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு: டி.ஐ.ஜி.யை மீனவர்கள் முற்றுகை


இந்திய ரிசர்வ் பட்டாலியன் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு: டி.ஐ.ஜி.யை மீனவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Jan 2018 4:15 AM IST (Updated: 24 Jan 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் அருகே இந்திய ரிசர்வ் பட்டாலியன் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆய்வு செய்ய வந்த போலீஸ் டி.ஐ.ஜி.யை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

பாகூர்,

புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே நரம்பை மீனவ கிராமத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசாருக்கான (ஐ.ஆர்.பி.என்.) அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் அமைக்க கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு 96 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர்.

அந்த இடத்தில் தங்களுக்கு சுனாமி வீடு கட்டித்தர வேண்டும், விளையாட்டு மைதானம், சுடுகாடு போன்ற வசதிகள் செய்து தரவேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மீனவர்களின் கோரிக்கை குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸ் அலுவலகத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை டி.ஐ.ஜி. சந்திரன் நேற்று ஆய்வு செய்ய வருவதாக நரம்பை மீனவ கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டனர்.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள், மரங்களில் கருப்புக் கொடி கட்டி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்தநிலையில் ரிசர்வ் பட்டாலியன் படை அலுவலகத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய டி.ஐ.ஜி. சந்திரன், ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டர் ஐ.ஆர்.சி.மோகன், போலீஸ் சூப்பிரண்டு ரகீம், துணை கமாண்டர் குருராஜ் ஆகியோர் வந்தனர். அவர்களை மீனவர்கள், பெண்கள் அந்த இடத்துக்குள்ளே செல்ல விடாமல் தடுத்து, முற்றுகையிட்டனர். இவர்களை போலீசார் கலைந்துபோகுமாறு கூறினார். இதனால் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டி.ஐ.ஜி. சந்திரன், இந்த இடம் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கு வேறு பயன்பாட்டுக்கு வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடுமாறு கூறினார். இதையடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு, போலீஸ் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த அமைச்சர் கந்தசாமி, நரம்பை கிராம முக்கிய பிரமுகரிடம் செல்போனில் பேசி, போராட்டத்தை கைவிடும்படி கூறினார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவோம் என்றார். இதையடுத்து போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.

பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் 50 பேர் அமைச்சர் கந்தசாமி தலைமையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, இந்திய ரிசர்வ் பட்டாலியன் அலுவலகம் அமைத்தால், தங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும், எனவே பட்டாலியன் அலுவலகம் அமைக்கக் கூடாது என்று மனு கொடுத்தனர்.

மேலும் காவல் துறை பெயரில் உள்ள நிலத்தை மாற்றி, வேறு பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்றனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் உறுதி கூறினார். 

Next Story