சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு


சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 24 Jan 2018 4:30 AM IST (Updated: 24 Jan 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுவையில் பருவமழையையொட்டி சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் விபத்தில் சிக்கி கல்லூரி மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார். சாலையை சீரமைக்கக்கோரி அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் 24 மணிநேர போராட்டத்தினையும் நடத்தினார்.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பெடி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் அன்பரசு, கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ், தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அதிகாரிகளிடம் கவர்னர் கிரண்பெடி, பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் பணிகள், அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைப்பு பணிகளின் நிலை குறித்தும் கேட்டார். அந்த பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்களை அடையாளம் காணும் வகையிலான உடைகளை அணிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பொதுப்பணித்துறையில் பணிமுடித்த காண்டிராக்டர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி விவரங்கள் குறித்தும், நியமன அடிப்படையில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். குளங்களில் திருட்டுத்தனமாக மீன்பிடிப்பதை தடுக்கவும், தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

கூட்டம் முடிந்ததும் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என நினைக்கிறேன். அரசின் பணத்தை தங்களது பணம் போன்று சீரிய முறையில் செலவு செய்யவேண்டும். திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.

பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் சாலையை போடுவது, தொடர்ந்து 3 ஆண்டுகள் அதை பராமரிப்பு செய்வது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

அவரிடம் புதுவையில் பஸ் கட்டண உயர்வு தொடர்பான கோப்புகள் தங்களிடம் வந்துள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, கட்டண உயர்வு தொடர்பான எந்த கோப்புகளும் தன்னிடம் வரவில்லை என்றும் வந்தவுடன் மக்கள் பாதிக்கப்படாத நிலையில் செயல்படுத்தப்படும் என்று கிரண்பெடி தெரிவித்தார். 

Next Story