பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாலை மறியல் 188 பேர் கைது


பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாலை மறியல் 188 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2018 4:30 AM IST (Updated: 24 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 188 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதுரையில் அரசு பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இந்தநிலையில், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் விஜயராஜன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பெரியார் பஸ் நிலையம் அருகே திரண்டனர். அவர்கள் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் விஜயராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் உள்பட 188 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நடுரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மதுரை சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் பஸ் கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், அதனை திரும்ப பெறாவிட்டால் எங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.

திருப்பரங்குன்றம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் தாலுகா குழு உறுப்பினர் முத்துக்காளை தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் முத்துராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பொன் கிருஷ்ணன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே போல் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் நுழைவு வாயில் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் பஸ் நிலையம் முன்பு பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story