கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்


கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 24 Jan 2018 4:09 AM IST (Updated: 24 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருச்சி,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி தெற்கு புது தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவருடைய குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீடாமங்கலம் போய்விட்டு திரும்பி வந்த அர்ச்சுனன், அவரது உறவினர்களான அரவிந்த், ராஜேஷ், ராஜலட்சுமி ஆகியோரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அவர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

அவர்கள் 4 பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். வலங்கைமான் போலீசார் இதுபற்றி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அரவிந்த் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனையொட்டி இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களில் அம்சவல்லி, கவுரி ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

4 பேர் சரண்

வலங்கைமான் போலீசாரால் தேடப்பட்டு வந்த அருண்ராஜ், ரகுபதி, சுரேந்தர், சுபாகர் என்கிற சுதாகரன் ஆகிய 4 பேரும் நேற்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-5 கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் எம்.நாகப்பன் உத்தரவிட்டார். 

Next Story