பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம்: நெல்லையில் வக்கீல்கள் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம்: நெல்லையில் வக்கீல்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Jan 2018 4:30 AM IST (Updated: 24 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லையில் நேற்று வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ராணி அண்ணா கல்லூரியில் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் நேற்று முன்தினம் சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டையில் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையில் வக்கீல்கள் தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வக்கீல் சங்க தலைவர் சிவசூரியநாராயணன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த வக்கீல்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் வக்கீல்கள் அருள்மாணிக்கம், சந்திரசேகர், அப்துல்ஜப்பார், பழனி, ரமேஷ், மந்திரமூர்த்தி, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல்களின் இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கல்லூரி மாணவர்கள் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். அதுபோல் மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவியது. இதையடுத்து நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேற்று காலை பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்துக்காக கல்லூரியை விட்டு வெளியே வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரிக்குள் அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று மதியம் 1.30 மணி அளவில் கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மதியம் 2 மணி அளவில் முடிவடைந்தது. பின்னர் மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர்.


Next Story