அரசு பஸ் கண்டக்டரின் பணப்பை பறிப்பு போலீஸ் வலைவீச்சு


அரசு பஸ் கண்டக்டரின் பணப்பை பறிப்பு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jan 2018 4:09 AM IST (Updated: 24 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பஸ் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்‘ மற்றும் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் அரசு பஸ்சின் முன்பு நின்றிருந்த கண்டக்டரின் பணப்பையை பறித்து சென்ற சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி,

எடப்பாடியில் இருந்து மேட்டூர் செல்லும் அரசு பஸ் நேற்று இரவு 7 மணிக்கு எடப்பாடி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்சை டிரைவர் சிவக்குமார் ஓட்டி வந்தார். இந்த பஸ் நிறுத்தப்பட்ட உடன் அதன் முன்பு அரசு பஸ்சின் கண்டக்டர் பூலாம்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் பணப்பையுடன் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது பஸ்சின் பின்புறம் இருந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அந்த வண்டியை ஹெல்மெட் அணிந்திருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஓட்டினான். பின்னால் அதே வயதுடைய வாலிபர் தனது முகத்திற்கு மப்ளரை முகமூடி போன்று அணிந்து கொண்டு அமர்ந்திருந்தான்.

அந்த வண்டியில் பின்னால் இருந்த வாலிபர், கண்டக்டர் வெங்கடாசலத்தின் அருகில் வேகமாக வந்தான். அவன் கண்இமைக்கும் நேரத்தில் கண்டக்டர் வெங்கடாசலத்தின் தோள்பட்டையில் மாட்டியிருந்த பணப்பையை பிடுங்கி கொண்டு மோட்டார்சைக்கிளில் ஏறினான். பின்னர் அந்த 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

போலீஸ் வலைவீச்சு

உடனே நிலைதடுமாறிய கண்டக்டர் சுதாரித்துக்கொண்டு திருடன், திருடன் என சத்தம் போட்டபடி மோட்டார் சைக்கிளை துரத்தி சென்றார். அவருடன் இருந்த டிரைவர் மற்றும் ஒருசிலரும் துரத்தி சென்றும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பிடிக்க முடியவில்லை. கண்டக்டரின் பணப்பையில் நேற்றைய வசூல் தொகை ரூ.7ஆயிரம் மற்றும் பஸ் பயண டிக்கெட்டுகள் இருந்துள்ளன. இது குறித்து கண்டக்டர் வெங்கடாசலம் எடப்பாடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம ஆசாமிகளை எடப்பாடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் பஸ் கண்டக்டரின் பணப்பையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story