போலீஸ் நிலையம் முன்பு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


போலீஸ் நிலையம் முன்பு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 24 Jan 2018 4:30 AM IST (Updated: 24 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே ஏரிகுத்திமேடு பகுதியில் திருவாரூரை சேர்ந்த முஹம்மதுபாஷா (வயது 48) என்பவர் தனது மனைவி பர்ஹத்பாத்திமா (32) மற்றும் மகள் அவமாபேகம் (17), மகன் பைரோஸ் (18) என்பவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பர்ஹத்பாத்திமாவுக்கு பேரணாம்பேட்டை சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பர்ஹத்பாத்திமா குடும்பத்தை விட்டு தனது மகள் அவமாபேகத்துடன்பெங்களூரு சென்று அங்கு நடைபாதையில் டிபன் கடை நடத்தி வந்தார். இதனை அறிந்த அஸ்லம்பாஷா, பெங்களூருக்கு அடிக்கடி சென்று அவரை சந்தித்து இரவு நேரத்தில் அங்கு தங்கி வந்தார்.

அப்போது பர்ஹத்பாத்திமா, தனது மகள் அவமாபேகத்திடம், அஸ்லம்பாஷாவுக்கு கை, கால் அமுக்கி விடும்படி வற்புறுத்தி உள்ளார். இதனைபிடிக்காமல் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் முஹம்மதுபாஷா தனது மகள் அவமாபேகத்தை பேரணாம்பட்டிற்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் பேரணாம்பட்டு அருகே கவுராப்பேட்டையில் தர்கா பகுதியில் தங்க வைத்தார்.

இதனால் பர்ஹத்பாத்திமா கடந்த 20-ந் தேதி பேரணாம்பட்டு போலீசில் தனது மகளை, கணவர் முஹம்மதுபாஷா கடத்திக்கொண்டு வந்து தவறான பாதையில் ஈடுபடுத்த முயற்சித்து மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தந்தை, மகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவமாபேகம் தன்னை யாரும் கடத்தவில்லை, தனது தந்தை பாதுகாப்பில் இருந்து வருவதாகவும், தனது தாயார், கள்ளக்காதலன் அஸ்லம்பாஷாவிற்கு கை, கால் அமுக்கி விடும்படியும் கூறியதால் எனக்கு பிடிக்கவில்லை. இதை எனது தந்தை தட்டி கேட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எனது தந்தையை தாக்கினர். அதனால் நான் தாயாருடன் செல்ல விருப்பம் இல்லை என கூறினார்.

இந்தநிலையில் நேற்று பர்ஹத்பாத்திமா தனது மகன் பைரோஸ், தங்கை மகன் சமீம் ஆகியோருடன் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்து அங்கு தனது கணவரை கைது செய்யக்கோரி பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்து தன் மீதும், மகன்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த பொதுமக்கள் தடுத்து தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதுதொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story