பெண்களின் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்


பெண்களின் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2018 4:00 AM IST (Updated: 24 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

பெண்களின் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தின் 25-வது ஆண்டு விழா ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் மாவட்ட சமூக நல அதிகாரி ஆர்.அம்பிகா வரவேற்று பேசினார். இதில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

4 ஆயிரம் மனுக்கள்

தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை பற்றி பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கிராமப்புறங்கள், மலைக்கிராமங்களில் உள்ள பெண்கள் சிலர் விழிப்புணர்வு இல்லாமல் தங்களுடைய பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்வது என்றே தெரியாமல் உள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் ஆணைய அலுவலகம் சென்னையில் உள்ளது. அங்கு பெண்கள் மீதான வன்முறைகள், பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். கடந்த 2016-ம் ஆண்டு 1,600 மனுக்களுக்கு தீர்வு ஏற்படவில்லை. இதுவரை மொத்தம் 4 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருக்கிறது. இந்த மனுக்களின் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

கடுமையாக்கப்பட வேண்டும்

மகளிருக்கு எதிரான வன்முறை, சொத்து பிரச்சினை, குடும்பத்தகராறு போன்றவற்றை பெண்கள் மறைக்காமல் வெளியே சொல்ல வேண்டும். மகளிர் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும், 1091 என்கிற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக திருமணம் முடிந்து வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றுவிட்டு கைவிடப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மலேசியா, அமெரிக்கா என எந்த நாடாக இருந்தாலும், இந்திய தூதரகத்தை பயன்படுத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதேபோல் பெண்களை ஏமாற்றியதாக 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் சட்டத்தில் தண்டனை குறைவாக இருப்பதால் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். எனவே இதைத்தடுக்க பெண்களும் துணிய வேண்டும். பெண்களின் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டமும் கடுமையாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் பேசும்போது கூறியதாவது:-

கடின உழைப்பு

பெண்கள் தங்களது இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இதற்காக லட்சியத்துடன் செயல்படுவது அவசியம். மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களையும் வெளியில் பேசிவிடக்கூடாது. எந்தவொரு விவரங்களையும் சிந்தித்து பேச வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரத்து 400 அரசு பணியாளர்கள் உள்ளனர். இதில் 60 சதவீதம் பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடைய கடின உழைப்பு, சிறந்த பணி காரணமாக நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. வாழ்வின் முன்னேற்றத்துக்கு சரியான திட்டமிடுதலும், சுயபரிசோதனையும் அவசியம். தெளிவான சிந்தனையுடன் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஊர்வலம்

விழாவில் கல்லூரியின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் கமலவேணி, ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.முருகன், ரீடு அமைப்பின் இயக்குனர் கருப்புசாமி மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

முன்னதாக பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறைரோடு வழியாக சென்று திண்டலில் நிறைவடைந்தது. இதில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.


Next Story