பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவ, மாணவிகள் மீது போலீஸ் தடியடி


பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவ, மாணவிகள் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 24 Jan 2018 4:30 AM IST (Updated: 24 Jan 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

தமிழகத்தில் பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் மதுரை அரசு இசைக் கல்லூரி மற்றும் பசுமை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 3 ஆயிரம் பேர் கல்லூரி முடிந்ததும் மதுரை பசுமலை பஸ் நிறுத்தத்தில் திரண்டனர்.

மறியல்

பின்னர் அவர்கள் பஸ் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், மன்னவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவ, மாணவிகள் மறியலை கைவிட மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவ, மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதில் சிதறியடித்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள் மற்றும் அரசு ஜீப் மீது சிலர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போராட்டம் தொடர்பாக மாணவர்கள் ராம்குமார் (வயது 29), மகேஷ்குமார் (24), சங்கிலி ராஜா (25), கார்த்திக், கவுதம் பாரதி, அறிவானந்தம், அஜித்குமார் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story