கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2018 4:30 AM IST (Updated: 24 Jan 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சிதம்பரம், சி.முட்லூர், விருத்தாசலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

அரசு பஸ்களில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், இதை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா, அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட மாணவர்கள், சிறிது நேரம் கழித்து அனை வரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், இந்த கட்டண உயர்வை உடனே வாபஸ் பெறக்கோரியும் மாணவ- மாணவிகள் கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்களது போராட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கடலூர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கல்லூரி முதல்வர் மனோண்மணி, இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story