அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் சிவசேனா போட்டியிடும்


அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் சிவசேனா போட்டியிடும்
x
தினத்தந்தி 24 Jan 2018 5:56 AM IST (Updated: 24 Jan 2018 5:56 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் சிவசேனா போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மும்பை,

மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரே பிறந்த நாளையொட்டி, நேற்று அக்கட்சிக்கான உள்கட்சி தேர்தல் நடந்தது. இதில், உத்தவ் தாக்கரே மீண்டும் சிவசேனா தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில், உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா அரசையும் கடுமையாக சாடினார். உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

இந்த அரசு விளம்பரத்துக்காக அதிக அளவில் பணத்தை விரயம் செய்கிறது. ஆனால், எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த அரசை கீழே இறக்க வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. பசுக்களை கொன்றால் குற்றமாக கருதுகிறார்கள். அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொய்களை கட்டவிழ்ப்பதும் பாவம் தான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இன்றைக்கு நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறதா அல்லது பின்னோக்கி நகர்கிறதா என்றே தெரியவில்லை. தேர்தல் என்றால், பாகிஸ்தானை இழுக்கிறார்கள். குஜராத் தேர்தலில் கூட பாகிஸ்தானின் பெயர் அடிபட்டது. இதனால், உங்கள் சொந்த நாட்டு பிரச்சினையில் எங்களை இழுக்காதீர்கள் என்று பாகிஸ்தான் கண்டனத்தை பதிவு செய்தது.

அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை அழைத்து கொண்டு பிரதமர் மோடி ஆமதாபாத் சென்றார். அங்கு அவர்கள் காற்றாடி விட்டு மகிழ்ந்தனர். கேள்வி என்னவென்றால், பெஞ்சமின் நேட்டன்யாஹூவை ஆமதாபாத் அழைத்து சென்றதன் நோக்கம் என்ன? இதனால் என்ன பயன் வந்துவிட போகிறது? அவரை ஸ்ரீநகருக்கோ அல்லது லால் சவுக்கிற்கோ அழைத்து சென்று மூவர்ணக்கொடியை ஏற்றி இருந்தால், தேசம் பெருமைப்பட்டிருக்கும்.

‘நல்ல நாட்கள்’ வரும் என்று மோடி வாக்குறுதி அளித்த பின்னரும், எல்லையில் ஒவ்வொரு நாளும் ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்கிறார்கள். அவர்களது உடல் சிதைவடைந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று நாம் சொல்லி கொண்டே தான் இருக்கிறோம். வெற்று வார்த்தை ஜாலத்தை தவிர்த்து, உறுதியான நடவடிக்கை எடுங்கள்.

கடற்படை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க மறுத்தால், துல்லிய தாக்குதலுக்கான (சர்ஜிகல் ஸ்டிரைக்) பெருமையை எடுத்து கொள்ளாதீர்கள். இந்துக்களின் வாக்குகள் சிதறிவிட கூடாது என்ற நோக்கத்துக்காக பிற மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதை சிவசேனா தவிர்த்து வந்தது. இனி தேர்தல் முடிவை பற்றி கவலைப்படாமல், அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிடுவோம்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார். 

Next Story