கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண் போல போனில் பேசி ஏமாற்றியதால் போலீஸ்காரர் வெறிச்செயல்


கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண் போல போனில் பேசி ஏமாற்றியதால் போலீஸ்காரர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 Jan 2018 5:00 AM IST (Updated: 25 Jan 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரிடம் பெண் போல பேசி ஏமாற்றிய கல்லூரி மாணவர்வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வ.புதுப்பட்டி, கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த தெற்குமலை என்பவருடைய மகன் அய்யனார் (வயது 25). பட்டதாரியான இவர் விருதுநகர் அருகிலுள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கலையரசன் என்பவருடைய மகன் கண்ணன் என்கிற குமார் (26). இவர் சென்னை எண்ணூரில் போலீஸ்காரராக உள்ளார். குமாரின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்ட அய்யனார் அவரிடம் பெண் குரலில் பேசியுள்ளார். இதில் மயங்கிய அவர் அய்யனாரை பெண் என்றே நினைத்து பேசி பழகிவந்துள்ளார். இந்த நிலையில் குமார் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது, தன்னிடம் பெண்போல பேசி ஏமாற்றியது அய்யனார் என்று தெரியவந்துள்ளது. குட்டு வெளியான நிலையில் குமாரால் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலவில்லை. இதையடுத்து, குமார் கடந்த வாரம் விஷம் குடித்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவரை பார்க்க வந்த உறவினர்கள் விஷம் குடித்ததற்கான காரணத்தைக் கேட்டனர். அப்போது அய்யனார், தன்னை நம்பவைத்து அவமானப்படுத்திவிட்டதாக, குமார் கூறினார். இதைத்தொடர்ந்து அய்யனாரை தீர்த்துக்கட்ட குமாரும், அவரைச்சார்ந்தவர்களும் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் குமாரின் தம்பி விஜயகுமார் (21), டான்சி என்கிற தமிழரசன் (27), மற்றொரு தமிழரசன் (23) ஆகிய மூவரும் நேற்றுமுன்தினம் இரவு அய்யனாரிடம் சென்று குமார் அழைத்து வரச் சொன்னதாக கூறி, போதர் கண்மாய் அருகேயுள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த குமாரும், மற்ற மூவரும் சேர்ந்து அரிவாளால் அய்யனாரை வெட்டிக் கொன்றனர். பின்பு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் பிரபாகரன் விசாரணை மேற்கொண்டு, விஜயகுமார், டான்சி என்கிற தமிழரசன், மற்றொரு தமிழரசன் ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் குமாரை தேடி வருகிறார். 

Next Story