ஈரோடு மாவட்டம் கொடுமணலில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது


ஈரோடு மாவட்டம் கொடுமணலில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் கொடுமணலில் இந்திய தொல்லியல் ஆய்வக அதிகாரிகள் முகாமிட்ட அகழ்வாராய்ச்சியை தொடங்கினார்கள்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப்பணியை தொடங்கி உள்ளது. தொல்லியல் ஆய்வக அதிகாரிகள் குழுவின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கொடுமணல் கிராமத்தில் முகாம் அமைத்து உள்ளனர்.

மேலும், கொடுமணலில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய உள்ள பகுதியில் 30 தொழிலாளர்கள் மூலம் தோண்டும் பணி தொடங்கி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்வு செய்து, அந்த பகுதியில் மண்தோண்டும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதுபற்றி தொல்லியல் ஆய்வக குழு கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறும்போது, ‘இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுவது, இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காப்பது என்ற 2 முக்கியமான பணிகளை இந்திய தொல்லியல் ஆய்வகம் செய்து வருகிறது. அதன்படி கொடுமணல் பகுதியில் முகாமிட்டு ஆய்வை தொடங்கி இருக்கிறோம். வருகிற ஏப்ரல் மாதம் வரை இங்கு பணிகள் நடைபெறும்’ என்றார்.

கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினரில் ஆய்வு தொடங்கி இருப்பது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொடுமணல் பகுதி சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்பு உடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யல் ஆற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது? இதன் உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகுக்கு தெரியவரவில்லை.

இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985-ம் ஆண்டு நடத்தின. பின்னர் 1986, 1989, 1990-ம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியதில் 13 கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. 48 இடங்களில் அகழிகள் தோண்டப்பட்டு பழமையான அகழ்வு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999-ம் ஆண்டு மீண்டும் ஒரு ஆய்வு நடந்தது. அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்திய அளவில் மிகப்பெரிய ஆய்வாக கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோண்டப்படுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். 

Next Story