3-வது திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் கைது


3-வது திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

3-வது திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், கஞ்சா போதையில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த செங்குன்றம் நாரவாரிக்குப்பம் சி.கே.மாணிக்கனார் தெருவைச் சேர்ந்தவர் வேணு(வயது 80). இவருடைய மனைவி லட்சுமி(75). இவர்களுக்கு குமார்(30), முருகன்(28) என 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் குமாருக்கு திருமணாகி, குடும்பத்தோடு அதே நாரவாரிக்குப்பத்தில் உள்ள அண்ணா தெருவில் வசித்து வருகிறார். இளைய மகன் முருகன், பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் பந்தல் போடும் வேலை செய்து வருகிறார்.

முருகனுக்கும், பொன்னேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முருகன் கஞ்சா போதைக்கு அடிமையானவர். தினமும் கஞ்சா அடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் ஆபாச படங்களை காட்டி உறவுக்கு அழைத்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் திருமணமான 6 மாதத்திலேயே அந்த பெண், முருகனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

தினமும் குடிபோதையிலும், கஞ்சா போதையிலும் வீட்டுக்கு வந்து தந்தை வேணுவையும், தாய் லட்சுமியையும் தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்குமாறு சித்ரவதை செய்து வந்தார். இதனால் கடந்த ஆண்டு பொன்னேரியை அடுத்த அரசனூர் கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரை முருகனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைத்தனர்.

2-வது மனைவியிடமும் அவர், தனது லீலைகளை காட்ட ஆரம்பித்தார். முதல் மனைவியையும் சித்ரவதை செய்தது போலவே 2-வது மனைவியை சித்ரவதை செய்தார். இதனால் அவரும் முருகனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் முருகன் மது குடிக்கவும், கஞ்சா போதைக்கும் பணம் கேட்டு பெற்றோரை துன்புறுத்தி வந்தார். மேலும் தனக்கு 3-வது திருமணம் செய்து வைக்கும்படியும் பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி முருகனின் தந்தை வேணு இறந்து விட்டார். வயதானதால் இயற்கை மரணம் அடைந்து விட்டார் என நினைத்து அவரது உடலை செங்குன்றம் நவீன எரியூட்டு மைதானத்தில் எரித்து விட்டனர்.

கணவர் இறந்த பிறகு லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். முருகன் தினந்தோறும் குடித்துவிட்டும், கஞ்சா அடித்துவிட்டும் வந்து தாய் லட்சுமியிடம் தனக்கு 3-வது திருமணம் செய்து வைக்குமாறு நச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் லட்சுமியை தாக்குவதால் அவருடைய அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கும். அவர்கள் முருகனை திட்டி வந்தனர். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்த முருகன், தாய் லட்சுமியிடம் நள்ளிரவு 1 மணி வரை இதுதொடர்பாக தகராறில் ஈடுபட்டார். அதன்பிறகு அந்த வீட்டில் இருந்து சத்தம் ஏதும் வரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் மூத்த மகன் குமார், தனது தாய்க்கு காலை உணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் தனது தாய் லட்சுமி, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தாயுடன் நள்ளிரவு வரை தகராறில் ஈடுபட்ட இளைய மகன் முருகன்தான், பெற்ற தாய் என்றும் பாராமல் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் முருகன், நேற்று மதியம் செங்குன்றம் கிராம நிர்வாக அதிகாரி பர்கத் உசேனிடம்் சரணடைந்து தனது தாயார் லட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் முருகன், அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் செங்குன்றம் பகுதியில் பந்தல் போடும் வேலை செய்து வருகிறேன். சிறுவயது முதலே எனக்கு கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. கஞ்சா அடித்து விட்டால் நான் என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது. இதனால் எனது 2 மனைவிகளும் என்னுடன் வாழாமல் சென்று விட்டனர். கடந்த வாரம் என் தாய்-தந்தையிடம் எனக்கு 3-வது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டேன்.

இதற்்கு மறுத்ததால் எனது தந்தை வேணுவை இரும்பு கம்பியால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன். ஆனால் நான் கொலை செய்ததை யாரும் கண்டு பிடிக்கவில்லை. அவர் வயது முதிர்வு காரணமாக இயற்கை மரணம் அடைந்து விட்டார் என அனைவரும் நம்பி விட்டனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து எனது தாயாரிடம் எனக்கு 3-வது திருமணம் செய்து வைக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். பின்னர் கஞ்சா போதையில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோழியின் கழுத்தை அறுப்பதுபோல என் தாயாரின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். போலீசார் என்னை பிடித்து விடுவார்கள் என்பதால் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

முருகன் மீது செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story