வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம்: முன்னாள் காதலியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்த டிரைவர்


வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம்: முன்னாள் காதலியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்த டிரைவர்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த காதலன், காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை தருவதாக தனது முன்னாள் காதலியை அழைத்துச்சென்று தனது நண்பருடன் சேர்ந்து கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் இரவு குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சாலையோரமாக மின் விளக்குகள் எதுவும் எரியாமல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

போலீசார் சந்தேகத்தின்பேரில் காரின் அருகே சென்று பார்த்தனர். காருக்குள் இளம்பெண் ஒருவர், ஆடைகள் கிழிந்த நிலையில் கதறி அழுதபடி இருந்தார். அவருக்கு அருகில் 2 வாலிபர்கள் சிரித்துக்கொண்டு இருந்தனர்.

போலீசாரை கண்டதும் காரில் இருந்த வாலிபர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், இளம்பெண் உள்பட 3 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அதில், தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த காதலன், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து காரில் வைத்து நண்பருடன் சேர்ந்து கற்பழித்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

அம்பத்தூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 30). கால் டாக்சி டிரைவர். இவர் திருவள்ளூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது.

ஆனாலும் தன்னுடன் செல்போனில் பேசும்படியும், நேரில் வந்து தன்னை பார்க்க வரும்படியும் அசோக்குமார் அடிக்கடி அந்த பெண்ணிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தனது முன்னாள் காதலியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அசோக்குமார், “நாம் இருவரும் காதலிக்கும்போது சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் நண்பர் ஒருவர் வைத்து உள்ளார். நீயும் நேரில் வந்தால்தான் அந்த புகைப்படங்களை எல்லாம் தருவதாக கூறுகிறார். எனவே நீ நேரில் வா” என்றார்.

அதை உண்மை என்று நம்பிய இளம்பெண்ணும், தனது முன்னாள் காதலன் சொன்னபடி நேற்று முன் தினம் இரவு அம்பத்தூர் வந்தார். அப்போது தனது நண்பரான அன்பரசு(26) என்பவருடன் காரில் அங்கு வந்த அசோக்குமார், தனது முன்னாள் காதலியையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, அசோக்குமார் தனது சில்மிஷத்தை ஆரம்பித்தார்.

என்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் பழிவாங்கவே உன்னை அழைத்து வந்தேன் என்று கூறி காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு காருக்குள் வைத்தே தனது முன்னாள் காதலியை கற்பழித்தார்.

அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தன்னை விட்டு விடும்படி கதறினார். ஆனால் இரவு நேரம் என்பதாலும், காரின் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததாலும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. அடுத்தவரின் மனைவி என்றும் பாராமல் முன்னாள் காதலியை கதற கதற கற்பழித்து உள்ளார்.

பின்னர் தனது நண்பருக்கும் அந்த பெண்ணை விருந்தாக்கினார். அன்பரசும் அந்த பெண்ணை காருக்குள்ளேயே வைத்து கற்பழித்துள்ளார். இருவரும் மாறி, மாறி இளம்பெண்ணை கற்பழிக்கும் போது ஒருவர் மாற்றி ஒருவர் அந்த காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ படம் எடுத்து உள்ளனர்.

என்னை ஏமாற்றி அழைத்துவந்து இப்படி கற்பழித்து விட்டீர்களே? என்று கூறி அந்த இளம்பெண் கதறி அழுதார். அதற்கு அவர்கள், இதுபற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், இந்த வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இளம்பெண்ணை கற்பழித்ததாக அசோக்குமார் மற்றும் அவருடைய நண்பர் அன்பரசு இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story