விபத்துகளை தவிர்ப்பது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை


விபத்துகளை தவிர்ப்பது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தை தவிர்ப்பது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது பணிக்கு செல்லும்முன்பு கண்டக்டர், டிரைவர்கள் போதையில் உள்ளனரா? என்பதை அறிய அலுவலகங்களில் சோதனை கருவி பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சேலம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மேலாண் இயக்குனர் கே.பாண்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னை சாலை பாதுகாப்பு பிரிவு இணை இயக்குனர் ஜோஸ் பேட்ரிக், சேலம் மண்டல துணை போக்குவரத்து ஆணையாளர் பொன்.செந்தில்நாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மேலாண் இயக்குனர் பாண்டி கூறியதாவது:-

சோதனை கருவி

சேலம்-ஈரோடு சாலையில் உள்ள ராஜாஜி தொழில்நுட்ப கல்லூரி எதிரில் அமைந்துள்ள கிளை சாலையை மேம்படுத்த வேண்டும். சேலம்-நாமக்கல் வழித்தடத்தில் சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிளைச்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும். முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கான இடம் தேர்வு செய்து அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து கிளை அலுவலகங்களில் கண்டக்டர்கள், டிரைவர்கள் பணிக்கு செல்லும் முன் ஏதேனும் போதைப்பொருள் உட்கொண்டு உள்ளனரா? என்பதை சோதனை செய்ய அதற்கான கருவி அந்தந்த கிளை அலுவலகங்களில் பொருத்தப்பட வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது, தகுதியான கல்வி உள்ளதை உறுதி செய்து அதற்கான தேர்வு நடத்தி பின்னர் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்.

முக்கிய சாலையில் கண்காணிப்பு கேமரா

இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது மட்டுமல்லாது அதற்கான கழுத்துப்பட்டையை(பெல்ட்) அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சேலம்-தொப்பூர் கிருஷ்ணகிரி சாலையில் விபத்தினை தவிர்க்கும் பொருட்டு முக்கிய இடங்களில் சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மாணவ, மாணவிகள் நன்கு அறியும் வகையில் போக்குவரத்து கல்வியை பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story