தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு


தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 25 Jan 2018 3:45 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் நகை - பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் மர்ம நபர்கள் 3 வீடுகளின் கதவுகளை உடைத்துள்ளனர்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டை அடுத்த மலமஞ்சனூர் புதூர் கிராமம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர்கள் சையத்அமான் உசேன் (வயது 40), ஷாகிரா (27), பத்ருகான் (61), சாபுகான் (58) கூலித் தொழிலாளர்களான இவர்களில் சையத்அமான் உசேன் தவிர்த்து, மற்ற அனைவரும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சையத்அமான் உசேன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு கடந்த 22-ந் தேதி இரவு வீட்டின் மாடியில் தூங்கச் சென்றார். நேற்று முன்தினம் எழுந்து பார்த்தபோது, கீழ்தளத்தில் உள்ள படுக்கை அறையில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.15 ஆயிரம், வெள்ளிப்பொருட்கள், மடிக்கணினி மற்றும் வாட்ச் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

வீடுகளின் கதவுகள் உடைப்பு

இதுகுறித்து சையத்அமான் உசேன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் பூட்டிக்கிடந்த ஷாகிரா, பத்ருகான், சாபுகான் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அந்த பகுதி மக்கள் பார்த்தனர். அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிகிடந்தன.

இதையடுத்து ஷாகிரா, பத்ருகான், சாபுகான் ஆகியோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு மட்டும் உடைக்கப்பட்டு உள்ளது. வீட்டில் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை என்று 3 பேரும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சையத்அமான் உசேன் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

Next Story